Saturday, December 25, 2021

 

தொழில்நுட்பம்
===============
நாலும் தெரியணுமுங்க
நாளும் ஏதோ படிக்கணுங்க
தெரிஞ்ச நாலும்
நாலு மாசத்துல
காலாவதி ஆகுதுங்க
இருந்தும்
நாளும் மாறும் தொழில்நுட்பத்துடன்
நாளும் ஏதோ படிக்கணுங்க
அனுபவம் சொன்ன பாடமங்க
தொழில்நுட்பம் மாறலாம்
முக்கியம்
எத படிக்கிறது இல்லங்க
யாரை தெரிஞ்சுக்கிறல இருக்கிறதுங்க
தெரிஞ்சும்
நாளும் மாறும் சூழ்நிலையுடன்
நாளும் ஏதோ படிக்கணுங்க

Thursday, December 23, 2021

 ஒய்வு

=====
குறிக்கோள்கள்
கடக்கும் தூரம் சில
சோர்வுகள் காணலாம்
ஓய்ந்து ஒதுங்க தேவையில்லை
ஒளிய தேவையில்லை
பயந்து கைவிட தேவையில்லை
தேவை சிறுது ஓய்வுதான்
சிறு ஒய்வு களைப்பைக் களையும்
உற்சாகம் தரும்
வெற்றிநடை தொடரட்டும்

Thursday, November 4, 2021

 ஆசைகள்

=========
ஆசைகள் பல கனவில் பூட்டி
சின்ன சின்னதாய் சிதறி
எந்தன் காரியங்களில்
சில சமயங்களில் அற்பமாய்
சில சமயங்களில் அற்புதமாய்
தேவைகளுடன் ஆசைகள்
மெல்ல மெல்ல வலுவடைந்து
ஆசையா தேவையா என்றறியாமல்
என்னை மறந்து
கண்ணை மறைத்து
வளர்ந்தன பேரரசையாய்

Saturday, June 12, 2021

 சிறுதனம்

========
சிறுவயதினிலே
சிறுசிறு திறமையும்
சிகரமாய் கண்டேன்
சிறுதனமாக...
வயதேற
நல்திறன் கண்டும் ஏனோ
மற்ற பெருந்திறனுடன்
பொருத்தி
சில்லறையாய் கண்டேன்
இன்றும் சிறுதனமாக...

Monday, March 15, 2021

 சோம்பறித்தனம்

================
நாளை நாளையென்று
நாளும் நாளைக் கடத்தினேன்
எளிதோ என்று எண்ணியோ சில
கடினமோ என்று எண்ணியோ சில
காரணம் ஏதுமின்று ஏனோ பல
நாளை நாளும் கடத்தினேன்
தினம் உழைத்தாலும்
நாளும் என்னுள்
வளர்த்தும் வளரா சோம்பறித்தனம்

Monday, January 25, 2021

 

மொபைலில் Apps
=============
புத்தகம் என்றவுடன் ஓடும் பல
பத்தரும் இன்று உன்னால்
படித்து படித்து மாளாமல்
நித்தமும் உந்தன் வாசம்
சித்தம் முழுவதும் வீசும்
மொத்தமும் அறிந்தும் அறியா
நண்பர்கள் கூட்டம் உடனென்றும்
காட்சிகள் பரிமாற்றம்
***
தொலைத்த பலமுகங்கள் தெரிந்தன
குலைத்த பலநட்புகள் பூத்தன
அலைந்து திரிந்து அடையா உறவுகள்
வலைக்குள் எளிதாய் கிட்டின
முகமறியா உந்தன் தொழில்நுட்பத்தில்
முகநூலே (Facebook )
***
என்னென்ன என்றேன்
எதையெதையோ கண்டேன்
சிறுசிறு குழுக்கள் பல கொண்டேன்
இருந்தும் இருந்தும் அதே விடயத்தை
மீண்டும் மீண்டும் பகிர்ந்து மகிழ்ந்தேன்
**
சொன்னதை திரும்ப சொல்லியே
மலையை மடுவாக்கி
மடுவை மலையாக்கி
இட்டுக்கட்டுவதை இயல்பாக்கி
இருப்பவர்கள் ஆயிரம் இருந்தும்
குழுமங்கள் என்றும் குழாவும்
உந்தன் வாயில்
WhatsApp...
****
சிறுகாட்சிகள் தன்னை
நிறுத்தி தனித்திறமையைக் காட்டி
ரசிகர்கள் கூட்டம் இருப்பதாக
நினைத்து தன்னை மறந்து
லைக்குமும் விமர்சனத்திற்கும் ஏங்க வைக்கும்
**
ஆசைகள் உன்மேல் இருந்தும்
உந்தன் ஆதிமூலம்
ஊருக்குள் உனக்கு தடை
எந்தன் அலைபேசியில் காணாமல்
போன டிக். டாக்..
****
குட்டிக்குட்டி செய்திகள்
ஆசை புகைப்படங்கள்
ஆனந்த வீடியோக்கள்
என் எண்ணமும்
குறுஞ்செய்திகளாய்
தொடரட்டும் அன்பு நெஞ்சங்கள்
***
வலையுக்குள் சிட்டுக்குருவியாய்
அடையாளங்கள் குறியீடுகள்
ஆயிரம் ஆயிரம் Hashtag இட்டு
எண்ணங்களுக்கு மெருக்கேற்றும்
ட்விட்டர்
****

Saturday, January 23, 2021

 

ஊழல்
======
உலையிடும் பல ஊழல்
இலைமறை காய்மறையாக இருந்து
கலையாய் வளர்த்து விஞ்ஞானம் சேர்த்து
விலைபோகும் வீணர்கள் உடன்
தலையாட்டும் பல கூட்டம் கண்டு
மலைபோல் நன்கு வளர்ந்து அதன்
சிலையாய் நிற்க செய்யும்
வலையில் சிக்காதவரையும்
நிலைகொள்ளா அதிகாரத்தில்
அலையலையாய் அலைக்கழித்து காலங்கள்
தொலைக்க வைத்து உடன் மனநிலையைக்
குலைகுலைக்க செய்யும்
தலைக்குள் தப்பாமல் நிற்கும்

Thursday, January 21, 2021

 

எட்டிப்பார்த்த சில காலம்
=======================
விட்டால் போதும் என்றிருந்தேன்
சிட்டாய் பறந்து சென்று
மிட்டாய் வாங்கி தின்ற காலம்
கிட்டிப்புள்ளு தெருவில்
தட்டுத்தடுமாறி விளையாடி
ஓட்டம் பல கண்ட காலம்
திட்டம் என்று ஏதுமின்றி ஒரு
கட்டத்தில் அடங்காமல்
நட்போடு திரிந்த காலம்
கொட்டங்கள் பல செய்து
குட்டித்தூக்கம் பல கண்டு
சுட்டித்தனங்கள் பல செய்த காலம்
கூட்டாய் நண்பர்கள் உடன் பல
கட்டுப்பாடு பலமறந்து
வெட்டியாய் உலா கொண்ட காலம்
பட்டிகை காலங்களில் கிட்டும்
தட்சணை காசில்
பட்டம் விட்டு பறந்த காலம்
தட்டுப்பாடுகள் ஏதுமின்றி
முட்டாள்தனமாய் செலவு செய்து
பட்டினியாய் சில காலம்
வட்டத்தில் தன்னை அடைத்து
நுட்பங்கள் பல கற்று
பட்டங்கள் பெற்ற காலம்
முட்டுக்கட்டைகள் பல இருந்தும்
முட்டிமோதி முன்னேறி
பட்டை கிளப்பிய காலம்

Monday, January 4, 2021

 

மனோரதம்
==========
நித்தம் மாறும் சித்தம்
அத்துடன் செல்லும் மனோரதம்
சத்தமில்லா சில மனயுத்தம்
சபையறியா சில சபதம்
பேச முடியா சில பேதம்
அளவிடா கொண்ட சில ஆயுத்தம்
பழகிடா வந்த சில பந்தம்
ஒன்றாமல் ஒன்றிய சில ஒப்பந்தம்
காண எண்ணும் சில மாயாவிநோதம்
ஆங்காங்கே கண்ட சில அற்புதம்
கணக்காய் அமைந்த சில கச்சிதம்
வீரியம் உணரா சில விரதம்
உரசிச் சென்ற சில உச்சிதம்
எத்தனை எத்தனை திருத்தம்
தர்க்கத்தில் வாரா யதார்த்தம்
நித்தம் மாறும் சித்தம்
அத்துடன் செல்லும் மனோரதம்