Monday, December 28, 2020

 

மனக்கணக்கு
=============
எத்தனை கணக்கு
எத்தனை கணக்கு
சொல்லாத பல மனக்கணக்கு
வருவதை வேண்டி சில
வர வேண்டடியதை எண்ணி சில
வேண்டாமல் வந்த சில
ஆசையில் மயங்கி சில
அறிவுக்கு அடங்கி சில
கற்பனையில் வடிந்த சில
தெரிந்து கொண்டு சில ஈடுபாடு
தெரிந்தும் தெரியாமலும்
வந்த பல இடர்பாடு
இருந்தும்
மாளாத மனக்கணக்கு

Sunday, December 27, 2020

 பயணங்கள்

===========
புதிதாக பயணங்கள் என்றும்
புரிந்தும் புரியாமல்
புதிர்கள்பல பொதிந்தது என்றும்
காண இயலாததையும்
மனதிற்கு ஒவ்வாததும்
கண் முன்னால் நின்றாலும்
கண்மூடி நின்றேன்
கண்மூடித்தனமாக மறைத்தேன்
புதிராக இன்றும்
தொடரும் பயணங்கள்

Thursday, December 17, 2020

 இயல்பு

=======
மனம் எதிர்கொள்ளும் நிலையோ இயல்பு
வாழ்வுடன் நடந்து செல்வதோ இயல்பு
புரியும் எதிர்வினையின் சராசரியோ இயல்பு
எனை எடுத்துரைப்பதோ இயல்பு
தனித்துவத்தை நிர்ணயிக்குமோ இயல்பு
மாறும் மனம் தேடும் அறிவு உள்ளவரை
நாளும் இயல்பாய் மாறும் இயல்பு
வேண்டும் எதையும் எதிர்க்கொள்ளும் இயல்பு

Wednesday, December 16, 2020

 

உரைக்கா எண்ணம்
==================
உரைக்கா எண்ணம் என்றும்
உண்டு நெஞ்சினிலே
ஏனோ அதெழும்
ஏனோ சொல்ல இயலாமல் விழும்
தேவையின்மையோ...
இயலாமையோ...
பொறையுடைமையோ...
சூழ்நிலையோ...
சந்தர்ப்பமோ...
சந்தேகமோ...
சந்தோஷமோ....
இயல்போ...
எதிலும் சேர்க்கலாம்
எல்லாவற்றையும் சேர்க்கலாம்
உரைக்கா எண்ணம் என்றும்
உண்டு நெஞ்சினிலே
உறைக்காவரை
உறையும் அதன் திண்ணம்
சில தினங்கள் உந்தும்
சில தினங்கள்
உடைக்கும் நெஞ்சை
சில தினங்களில்
சொல்லாமல் மறையும்
உரைக்கா எண்ணம் மற்றொன்று
உடன் உதிக்கும்
உரைக்கா எண்ணம் என்றும்
உண்டு நெஞ்சினிலே
உழன்று கொண்டே இன்றும்

 அதுதானே

=========
அதுதானே எனக்கு தெரியும்
அழுத்திக் கேட்டால்
அதுதானே எனக்கு கொஞ்சம் தெரியும்
கேள்விகள் சில கேட்டால்
அது மட்டும் கொஞ்சம் தெரியாது
கேள்விகள் பல கேட்டால்
எல்லாம் தெரிந்தவன் எவன்
எடுத்து சொன்னால் புரியாதவனா இவன்
அதுதானே படித்தால் புரியும்
இதென்று மற்றோன்றுக்கு தாவ...
அதுதானே எனக்கு தெரியும்

Tuesday, December 15, 2020

 

கற்பனை உலகம்
================
இயல்பை இயல்பாய் உடனிருந்து
மறக்கடிக்க செய்யும் உலகம்
ஆசைகளின் அடுக்கில்
அமைந்த உலகம்
உண்மையை எதிர்கொள்ளா
அச்சத்தின் அடித்தளத்தில்
அமைந்த உலகம்
உண்மையை என்றும் மறுக்கும் உலகம்
கண்ணைக் கட்டிக் கொண்டு
தன்னை மையமாய்
தன்னை மறக்கடித்து
தான் மட்டும் வாழும் உலகம்
எல்லோருக்குமான உலகம்
எவரும் காணா உலகம்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
இடையில் உள்ள திரிசங்குலகம்
கற்பனை உலகம்

 இனிது... கொடிது...

==================
இனிது இனிது நிந்தன் குரல் கேட்டல்
அதனினும் இனிது என்னுடனுன் உரையாடல்
அதனினும் இனிது காதல்மொழி பேசல்
கனவிலும் நனவிலும் அதுவே என் எண்ணம்
கொடிது கொடிது நின்னை காணாதிருத்தல்
அதனினும் கொடிது எனைக் கண்டும் காணாதிருத்தல்
அதனினும் கொடிது நீ சொல்லும் விளங்கா காரணம்
அதனினும் கொடிது நீ கொள்ளும் கோபம்
அதனினும் கொடிது விலகிச் செல்லுதல்

Thursday, December 10, 2020

 

கனவுடன் காதலி
=============
மணலைத் திரித்து கயிறாக்கி
மலைகள் பல இழுப்பேன் உன்
மடியில் தலைசாய்ந்தால்
என்றான் காதலன்...
அவளோ கணக்காய் ...
கனவுகளில் வாழ்வைக் கரைத்தாய்
கலைந்தால் கவிதைகள்
சில படித்தாய்
நீரிலே உந்தன் பெயர் எழுதி
நீங்கா புகழுடன் வா
காலம் காத்திருந்தால்
காணலாம்