Monday, April 25, 2016

பேசும் மௌனம்


வார்த்தைகள் கொண்டு வடிக்காதப் புத்தகம்
தீர்க்கமாக மனதுடன் கொள்ளும் இணக்கம்
நேர்படுத்த உதவும் அற்புத மார்க்கம்
மனம் உன்னோடு பேசும் மௌனம்

வடிவங்கள் வசங் கொள்ளும் வார்த்தைகளுடன்
கடிவாளம் இல்எனில் பிடிபடும் பிணக்குகளுடன்
படிப்பினை யறிந்து உரையாடு மனதுடன்
வடிவத்துடன் வளமாய் பேசும் மௌனம்

பேசும் வார்த்தைக்கு சில அர்த்தங்கள்
பேசா வார்த்தைக்கு பல அர்த்தங்கள்
நேசிக்கும் நெஞ்சில் பல தேற்றங்கள்
அர்த்தங்கள் ஆயிரம் பேசும் மௌனம்

உலகில் பேசா தென்று ஒன்றுமில்லை
விலகிக் கேளாதென்று மனங்கள் பலவுண்டு
நிலை மனதில் சலனமற்று நிற்கும் அறிவு
ஆழ்நிலை யுடன் பேசும் மௌனம்

- செல்வா

பி.கு: கவிதைமனியில் இந்த வாரம் பதிவில் வந்தது

Sunday, April 17, 2016

கஜல் துளிகள் 3


வானில் மேகக் கூட்டங்கள் காணா நட்சத்திரங்கள்
கலைந்தது மேகங்கள் சிந்தியதோ உதிரங்கள்

கரைத் தொட்டும் தொடாமல் செல்லும் அலைகள்
கரையும் மனத்தோடு என்றும் நகரும் என்நாட்கள்

நூலாடும் நெஞ்சினில் வேல்விழி காண்கையில்
போராடும் தினமதில் நினைவோ நறுமுகையில்

கவடுகளற்று வந்தது உன்மேல் காதல்
சுவடுகளற்று அழிந்தது இன்னும் உறுத்தல்

மடியில் தவழும் தென்றல் மனதிலென்றும்
வடிவங் கொள்ளும் காதல் முற்றும்

- செல்வா

பி.கு: கவடு - கபடம்

Saturday, April 16, 2016

தரிசனம்



தினம் தினம் உந்தன் தரிசனம்
காண வேண்டும் கரிசனம்
ஓடும் உன்பின்னே
ஓடும் காலமோடு
வேண்டும் உந்தன்  அரியாசனம்


என்னை யறியாமலே அனுதினம்
உன்னை சுற்றும் என் புவனம்
கண்ணோடு காண
ஈர நெஞ்சோடு
என்னைக் கட்டும் ஏகபந்தனம்


நாளோடு நான் காணும் நளினம்
காதல்  கொள்ளும் தினம் ஜனனம்
உன்னை நினைக்க
உண்மை  உரைக்க
நெஞ்சோடு காணும் தூவானம்

- செல்வா 

பி.கு: லிமெரிக் வகையில் எழுதியது 

Monday, April 11, 2016

கஜல் துளிகள் 2


கல்லிலும் நீருண்டு அறிந்தேன் உன்னால்
நீரிலும் கள்ளுண்டேன் உன் நினைவாலே

மழைத்துளிகள் ஒவ்வொன்றிலும் உன் முகம் தெரியுது
ஒவ்வொரு துளியிலும் என் இதயம் நனைகிறது

கண்ணே தாகங் கொண்டு பருக வந்தேன் காதல் நீர்
நாவற்று தவித்தேன் உந்தன் காதல் கானல் நீர்

கண்டேன் பார்வையின் ஓரம் நெஞ்சில் ஏறுதே பாரம்
சென்றாய் வெகுதூரம் கண்ணில் இன்னும் ஈரம்

வானவில்லின் வண்ணத்தின் அழகோ கண்ணில்
வானவில்லின் மறைவின் வலியோ மனதில்

காதல் கார்மேகங்கள் மூடும் என் வானம்
மனமோ உன் காதல் மழை காணா பாலைவனம்

- செல்வா

Sunday, April 10, 2016

வள்ளுவம் வாழ்வதெங்கே


பொய்மையும் வாய்மை இடத்து புரைநீர்த்து
தனக்குமட்டும் நன்மை செய்யின் எண்ணி
தீமை அலாதுபல சொல்லி

எப்பொருள் யார் யார் வாய்கேட்பினும்
மெய்பொருள்தனை யறியாமல் மயங்கி
மனம் சென்ற இடத்தான் செல்லவிட்டு
நன்றின்பால் உய்யதா அறிவுடன்

செல்லிடத்து சினம் கொண்டு வளர்த்து
அல்லிடத்தில் முதுகை அழகாய் வளைத்து
நகையும் உவகையும் மறந்து

சுய அன்புடன்
எல்லாம் தமக்கு உரியவராக இருந்து
என்புதோல் போர்த்த உடலாய்
இன்புற்று வாழத்தான் துடிக்க

அருளில்லா உலகில்
பொருளில்லார்க்கு
இவ்வுலகம் இல்லையென இசைந்து
ஈதல் இசைபட வாழ மறந்து

ஈன்றாள் பசி காணாதிருக்க
சான்றோர் பழிக்கும் வினைகளுடன்
முதியோர் இல்லம் சேர்த்து

அற்றால் அளவறிந்து உண்ணாமல்
பெற்ற பலநோய்களுடம்
அளவறியா ஆயிரம் மருந்துடன்

உண்ணற்க கள்ளை உணில்உண்க
அரசாங்க கஜானாவை நிரப்பி
இலவசப் பிச்சைகள் கொள்ள

வள்ளுவத்தை மெல்ல வழக்கொழித்து
வள்ளுவம் வாழ்தெங்கே? ஏட்டிலா ?
மனப்பாட செய்யுளிலா?

ஆயிரம றமுண்டு ஆயிரம் திறனுண்டு
ஆயினும் வாழ்விங்கு கேள்விக்குறியாய்
வள்ளுவம் வாழதான் அன்றி
வார்த்தைகளில் மட்டும் வாசம் செய்யல்ல
வள்ளுவன் தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாட்டில்
வள்ளுவம் காணாதவன் தமிழனல்ல
வழக்கு ஒன்று வேண்டும்
வானுயரப் புகழுடன் வாழ வேண்டும்

- செல்வா

பி.கு: தினமணி கவிதைமனியில் வந்தது

Saturday, April 9, 2016

கஜல் துளிகள்


நிழலும் முன்செல்லும் நிலவே நீ என்பின் நின்றால்
நிழலும் மறந்தேன் நிலவே நீ என்முன் நின்றதால்

பாவை மனதினில் விழுந்தேன்
உடைந்தது என் மனம் பாவை அங்கில்லை பாறை

எங்கும் செல்லும் காதல் உன்னிடம் செல்லா காதல்
விட்டு செல்லவில்லை என்னிடம் இன்னும்

மறதி நோய் என்னிடம் உன்னை மட்டும் மறக்காதால்
மனதை மறைக்காமல் சொல்ல மறந்ததால் மறதியில் நான்

வானவில்லாக நீ மழைக்காலம் இல்லை உன் மனதினில்
குளிரும் என் நெஞ்சம் கத்திரி வெயிலிலாக நீ என்றாலும்

- செல்வா

Friday, April 8, 2016

உந்தன் காதல்



கனிவது காதல் என்றும்
       தெளிவது நெஞ்சம் என்று
வஞ்சியுன் உள்ளம் நோக்கி
        உயிரது துடிக்கும் உள்ளில்

உளமது உன்னுக்  கில்லை
        என்றதும் நொறுங்க வில்லை
சொல்வது கள்ளம்  என்றும்
       தெரியுது உருகும் உள்ளம்

மல்லிகை மணமும் வீசும்
        கன்னியுன்  விரியும்  கூந்தல்
கனவுடன் எண்ணும் எண்ணம்
        உன்னுடன் என்றும் கொஞ்சும்

சிந்தனை சிதறும் என்னுள்
        சித்திரம் வரையும் கண்ணுள்
பாமரம்  என்றும்  வீசும்
        தாமரை உன்னால் வாழ்வும்

    -   செல்வா

பி.கு: விளம் மா தேமா - வாய்பாடு
   

அன்னை


சந்தம் : தந்தனந் தந்தந் தனதான

இந்துயிர் செல்வம் கருவாகி
விந்துவும் வம்சம் உருவாகி
அன்புடன் ஏந்தும் உயிராகி
இவ்வுயிர் மண்ணின் மணியாக
புத்திரன் உன்னால் பிறந்தாகி
பிஞ்சுநெல் கைக்குள் உறவாட
என்னையும் நித்தம் வளர்த்தாகி
என்றுமென் தெய்வம் வடிவாக

மின்னுதல் உந்தன் முகமாக
ரம்மியம் உந்தன் அழகாக
அற்புதம் உந்தன் வழியாக
கண்ணியம் உந்தன் மொழியாக
கற்பிதம் உந்தன் நயமாக

வாழ்நாளில் உன்னையென் அன்னையாக
பெற்றதென் வாழ்வின் வரமாக


- செல்வா

Thursday, April 7, 2016

அனுதின நிலை


சந்தம்:
தனதன தானத் தனத்த தனதன
தனதன தானத் தனத்த தனதன
தனதன தானத் தனத்த தனதன - தனதானா


வழிமுறை யாதும் அறிந்து அவளடி
தொடரவும் யாதும் மறக்கும் - அவளது
முடிவறி யாமல் பதைக்கும் அனுதின நிலைதானோ

தேடும்வழி தூரம் தெரிந்தும் முழுமதி
முகமதில் மோகம் துரத்த - தினமதில்
உளமது தேடும் உரைக்கும் அனுதின நிலைதானோ

உடையது மாறும் உறக்கம் குலையுது
கருவளை காணும் கருங்கண் களதுவும்
தடையது தானும் நெறிக்கும் அனுதின நிலைதானோ

அழகுனைக் கூறும் அனைத்தும் அழகடி
அடைமழைக் காணும் மனத்தில் தினமடி
உறவதில் கூடும் மணத்தில் அனுதின நிலைதானோ

- செல்வா

Tuesday, April 5, 2016

சமுக வலைத்தளங்கள்



எட்டிப் பார்க்கும்
குட்டிச் செய்திகளைத்
தத்தி தத்தி பின் தொடர
ட்விட்டர் கணக்கு

திண்ணைப் பேச்சுகளும்
பாடமாய்
சில காணொளிப் படங்களாய்
பல அன்பர்களுடன்
கைக்கோர்க்க
முகநூலில் சேர்க்க

கண்கள் கண்டது
மனதில் பதிந்தது
போதா தென்று
கையடக்க தொலைபேசியின்
காமிராவிலும் பதிய
உலகமும் காண
உபயம் சமுக வலைத்தளங்கள்

யான் கண்ட இ(து)ன்பம்
காண்க இவ்வையகம் என
யாதும் குறையாத வகை பங்கிட
யூ-ட்யூப் காணொளி

என்னடா நடக்குது நாட்டிலே
என்று கேள்வி கேட்காது வகையிலே
நடப்பை அப்போதே அப்டேட்
வாட்ஸ்-அப்ஸ் மூலம்

கண்ணுக்குத் தெரியாத வலையில்
தகவல் கைக்குள்ளே
உலகம் சுருங்குது

- செல்வா

Monday, April 4, 2016

காதல்வினைகள்


காதல் ஒருதலையாய்
காதல் கொண்டு
காதலில் விழுந்து
காதலில் கட்டுண்டு
காதலில் மிதந்து
காதல் கனிந்து
காதலில் உருகி
காதலில் கவிழ்ந்து
காதல் துரோகம்
காதல் கடந்து
காதல்மீது காதல்

வினாக்கள் கொள்ளாமல்
வினைகள் எத்தனை காதலுடன்
விடையில்லாமல்
தடை மறந்து
மடை திறந்து
இடைவிடாமல் கொள்ளும்
காதல்வினைகள்

- செல்வா

மயக்கம்



மயக்கத்தின் மடியிலே
தயக்கமதுக்  கொள்ளாமல்
இயக்கத்தில்  என்றும்
வயக்கம் இழந்து
முயக்கத்தில் முண்டி
உயக்கத்தில் உருள
கயக்கதில் நான்

மயக்கம் மதுவில் என்றும்
மயக்கம் உணர்வில் என்றும்
மயக்கம் அன்பில் என்றும்
மயக்கம் மனதில் என்றும்
மயக்கிருந்தேன் என்றும்

மயக்கம் தேவையைத்  தாண்ட
மயக்கம் தேவையற்றத்தைத் தூண்ட
மயக்கம் தேவையை மறக்க
மயக்கம் தேவையில்லாமல்
மயக்கத்தின் மடியில் நான்

  - செல்வா
முயக்கம் - புணர்ச்சி   வயக்கம் - ஒளி   உயக்கம் -  துன்பம்   கயக்கம் - கலக்கம் 

Sunday, April 3, 2016

வாக்கு உன் செல்வாக்கு


என்றும் உந்தன் வாக்கு
உடன் உயரிய நோக்கு
உள்ளதை அறி
உரியதை செய்
நல்ல சமுதாயத்தை உருவாக்கு

செல்லா வாக்கு வேண்டாம்
இடா வாக்கும் வேண்டாம்
ஏதும் சரியில்லை
யாரும் பிடிக்கல
இருக்கவே போடு நோடா ஒட்டும்

நாட்டுக்கு போடும் ஓட்டுக்கு
விக்காதே சில நோட்டுக்கு
வித்தது வாக்கில்லை
உன் வாழ்வும்
தொலைந்திடும் கேட்டுக்கு

யானைக்கு ஒரு காலம்
பூனைக்கு ஒரு காலம்
பழமொழி தேர்தலுக்கு
தேறாது - தீதுக்கு தீது
எப்போதும் தீராது நம் கெட்டக்காலம்

தேர்தல் சொல்லும் கணக்கு
மக்களின் தேர்தல் வாக்கு
வேட்பாளரை அறிந்து
நன்கு பயன்படுத்து
உயரும் வாக்கின் செல்வாக்கு

- செல்வா

பி.கு: தினமணி கவிதைமணி பிரசரிக்கப்பட்டது. லிமெரிக் வகையில் எழுதியது

Friday, April 1, 2016

அன்புமகள்


அன்பு மகளின் ஆனந்தம்
கண்டு கண்ணில் நீரோட்டம்
உன்னை வன்சொல் சொல்லாது
திண்ணம் கொண்டேன் உயிரோட்டம்

சின்னச் சின்னக் குறும்பாட்டம்
எந்தன் மனதின் அச்சுக்கள்
என்னை யியக்கும் வெப்பங்கள்
பந்தங் கொள்ளும் மூச்சுக்கள்

நாளும் மகளின் மாற்றங்கள்
மனங் கொள்ளும் ஆனந்தம்
மாறும் நெஞ்சின் கோணங்கள்
கனியும் வாழ்வின் ஆதாரம்

- செல்வா

பி.கு: மா மா காய் வாய்பாடு - அறுசீர் விருத்தம்