Saturday, May 30, 2020

தேவை

எழும்பாத வண்ணமாய்
எத்தனை ஆசைகள்
எத்தனை கனவுகள்
புழக்கமாய் வடிவாய்
வழக்கமாய்
வளர்ந்து மடிந்தது
தேடி அலையாத
தேவையென்ற
வரையறையாய்

Saturday, May 23, 2020

அவன்

 

பட்டது போதும் என்றேன்
பட்டால்தான் தெளியும்
அறிவு என்றான் அவன்
பட்டுதான் தெரிய வேண்டுமா என்றேன்
பகுத்தறியாது பட்டால்மட்டும்
பயனென்ன என்றான் அவன்
பகுத்தறிந்தால் எல்லாம் புரியுமா என்றேன்
புரியாத ஒன்றையெப்படி
பகுத்தறிவாய் என்றான் அவன்
புரியதான் என்ன செய்ய வேண்டும் என்றேன்
புரிந்தப்பின் என்ன செய்வாய்
என்றான் அவன்
புரியாமல் காரியங்கள் செய்லாமா என்றேன்
பட்டுதான் எல்லாம் உனக்கு
புரியும் என்றான் அவன்
என்றும் என்னை
எதிர்கொண்டு
எதிர்கேள்வி கேட்கும்
என்னுள் என்றும் அவன்

Friday, May 22, 2020

நேர்கோடுகள்

நிறைய காரியங்கள் செய்ததுண்டு
நிறைவைக் கண்டது எத்தனை
உரிய செயல்கள் செய்ததுண்டு
உயர்வை உய்த்தது எத்தனை
தேனொழுக வார்த்தைகள் பேசியதுண்டு
உள்ளத்தை தொட்டது எத்தனை
இயலாமல் இடித்துரைத்தது பலவுண்டு
இயன்றபோது செய்தது எத்தனை
நெஞ்சமறிந்து செயல்கள் பலவுண்டு
இணைந்த நேர்கோடுகள் எத்தனை

Wednesday, May 20, 2020

நினைவுகள்

நினைவுகளின் நீரோடையில் நீந்தி
நித்தமும் நிந்தன் நினைப்பே
அசைவுகளில் அனைத்திலும் அழகான
இசைவுகள் எனை இழுக்கும்
இணையிவள் என்றே நெஞ்சம் துடிக்கும்
கண்கள் காத்திருக்கும் கனிவுமொழி காண
சிந்தனையெல்லாம் என்றும்
சிறகடிக்கும் உந்தன் நினைவுகள்

Wednesday, May 13, 2020

விமர்சனங்கள்

தெரிந்ததோ தெரியாததோ
புரிந்தும் புரியாமல்
பல விமர்சனங்கள்
அதன்மேல்
பல விவாதங்கள்
தேவை அறியாமல்
மேலும் பல விமர்சனங்கள்
சமூக வலைதளத்தின்
வட்டத்தில் ....

Sunday, May 10, 2020

அன்னை

மனதோடு மறவாத
மனதின் மத்தியில்
வீற்றிருக்கும் உந்தன் எண்ணம்
தியாகம் எனும் சிறுவார்த்தையில்
திண்ணிக்க இயலாது
அன்பெனும் சிறுகூட்டிலே
அடைக்க இயலாது
எந்தன் உயிரில்
உறைந்திருக்கும் ஒரு
உன்னதம் நீயே...
மனதோடு மறவாத
அன்னையே

Saturday, May 9, 2020

சொல்

பொருளுடன் பொதிந்த
சொல்லும்
பொருளைப் பொறுப்பட்டாத
சொல்லும்
சொன்னதுண்டு
சொல்லால்
சுட்டதுமுண்டு
சுட்டுப்பட்டதுண்டு
சொல்லும் சில என்..
செல்லும் உணர்வின் வேகத்துடன்
சொல்லால் என்
உணர்வும் சில வேகம்
கொள்ளும்
சொன்ன சொல்லும்
சிலநாட்கள்
என்னைக் கொல்லும்
சிலநாட்கள்
என்னை வெல்லும்
சொல்லுக்குள் ஒளிந்த
பொருளாய்
பொருளுக்குள் ஒளிந்த
சொல்லாய்
சொல்லத்தான் என்
சொல்லின் ஆசை

சமத்துவம்

சமமற்றவை பலவற்றை
பேதம் மறந்து
சமமாக ஏற்கும் ஒத்தநிலை
சமத்துவம்
சமத்துவம் காணா
நிலைகள் உண்டு நம்மில் பல
சமரசம் கொள்ளா நிலையில்
சமத்துவம் காண்போம்

Thursday, May 7, 2020

அனுமானம்

அறிவின் ஆழங் கொள்ளா
அனுமானத்தின் அடுக்குகள்
ஆயிரங்களில் அமைந்த என்
அத்தனை தேற்றங்கள் மற்றும்
அதன் தோற்றங்கள்
அயர்ந்த பல அலசல்கள்
ஆராய ஆராய
ஆழமாக மேலும் கூடின
அனுமானத்தின் அடுக்குகள்

அடக்கம்

அடக்கமும் அறியாமையாய்
அல்லது ஆணவமாய்
அரங்கேறும்
தற்பெருமை பேசும் உலகில்...

Monday, May 4, 2020

ஆரவாரம்

 

மெல்ல மெல்ல குறையும்
மனதின் ஆரவாரம்
கடிகார முள்ளின் ஓசையும்
தெள்ள தெளிவாய் கேட்கும்
உன்னை உள்நோக்க...