Thursday, March 31, 2016

கலைநயம்


உருமாறும் உணர்விலே
உனையெண்ணி  மறதியில்
தவிக்கிறேன்  தனிமையில்  
துடிக்கிறேன் வெறுமையில்

பனிக்காலம் பொழுதிலே
குளிரோடு மனதினில்
உனதாக்கி கலைநயம்
மயக்கத்தில் களிநடம்

தினந்தோறும் நினைவிலே
கருவோடுக் கருத்துடன்  
உளமாகி உயிரெழக்   
கனவோடுக்  கலைகிறாய்

- செல்வா


பி.கு: புளிமாங்காய் + கருவிளம்  வகையில் வஞ்சித்துறை

இறைநிலை

குறைகள் கொண்டும்  
கறைகள் பலவால்  
சிறைப் பட்டாலும்
முறைகள் அறியாவிடினும்
மறைநிலை தம்மில்
இறைநிலை என்றும்
உறைவது உண்டு
மிறையது கொள்ளாமல்
பொறையுடன் உணர்விலே
நிறையது  காண்  

  • செல்வா

பி.கு : மிறை - வருத்தம், வேதனை

மின்மினிகள்


சந்தம்:
தய்யதன தான தய்யதன தான
தய்யதன தான ...... தனதான

கன்னிமகள் காண என்மனமும் தேடும்
மின்மினிகள் யாவும் தொடுவானில்  
அல்லிவிழி கூடும்  அன்புமடி வேணும்  
அள்ளித்தர யாவும் நினைவாகி

அல்லல்பட ஆசை  கண்களிலும் மாற்றம்  
கட்டழகி நேசம் எனையாளும்    

உள்ளமது தூது கொள்ளுவது மோகப்  
புன்னகையைக் காணக்   கவியாகி

மெல்லவரும் பாட்டு நித்தமது கேட்டு
நெஞ்சமதில் ஆடும் விளையாட்டு  

தொட்டுவிட தூவும் மல்லிகையின் வாசம்
மிஞ்சுமது நேசம் குறையாது  

- செல்வா  

Wednesday, March 30, 2016

கனித்தோட்டம்


கண்முன் என்றும் அழகிய கனித்தோட்டம்
கண்டும் இரசிக்கவில்லை கால்களில் ஓட்டம்
திண்டாடுது மனமோ புரியாத ஆட்டம்
கண்ணைக்கட்டி வாழ இன்னும் பல கூட்டம்
உண்மை அறியாமல் எதன்மேலோ நாட்டம்
முண்டியடித்து முன்னே நிற்கத் திட்டம்
புண்படுத்தப்பின் எப்போதும் கொள்ளும் வாட்டம்
மண்ணில் எதுவும் மடியும் அதுவே சட்டம்

- செல்வா

Tuesday, March 29, 2016

நட்பாகி


சந்தம் :
தத்தன தனதன தத்தன தனதன
தத்தன தனதன ...... தனதான

ஒத்திய உணர்வுடன் ஒப்பிய குணங்களும்
நண்பனின் மனமது எனதாகி

நித்தமும் மனதுடன் சுற்றிய இனியவன்
சுட்டெரி கனலிலும் உயிராகி

சத்திய உறவுடன் தொட்டது சுகமது
அக்கண மது துணை உளமாகி

மித்திர னவனது நட்பது இனியது
எப்போதும் அருளது பலகாலம்

உத்தம உரமுள உள்ளத்தில் உருகிடு
மெய்படும் உறுதியில் நட்பாகி

- செல்வா

பி.கு: "கைத்தல நிறைகனி அப்பமொ டவல்பொரி
கப்பிய கரிமுகன் ...... அடிபேணிக் " சந்தத்தில் எழுதியது.

Monday, March 28, 2016

தொட்டு சென்ற தென்றல்


என்னை மறந்து எதனுள்ளே ஒளிந்த
என்னை மென்மையாக தொட்டு
சென்றது ஒரு தென்றல்
என்னை மறந்ததை மறந்து
தென்றல் சென்ற திசையில்
தன்னில் பார்வை சென்றது
தென்றல் வரும் திசை
தன்னை நோக்கி நின்றது
பின்நோக்கி என்னை தள்ளியது

தென்றலோடு தன்னை மறந்த காலம்
முன்னில் வந்து நின்றது
மின்னலாய் கண்ணிலே தெரியுது
புன்முறுவல் கொண்டு எண்ணினேன்
பொன்னில் பொறிக்க வேண்டிய காலமது

- செல்வா

Sunday, March 27, 2016

அணையட்டும் சாதீ


அணைக்க வேண்டிய சாதி
கனலாய் எரியும் சோதி
பேதங்கள் போற்றும் மனம்
தூபங்கள் போடும் தினம்
வெறிகளுடன் குடிக்கும் குருதி

பேதங்கள் மனிதனின் சாபங்கள்
வேண்டாவிடின் கொல்லப்படும் வேதங்கள்
தர்க்கம் பல உண்டு
வீணாக விவாதம் உண்டு
சாதிகள் போடும் வெளிவேஷங்கள்

பள்ளியில் சேர சாதிச்சான்றிதழ்
சாதீக்கு கொடுத்தோம் அழைப்பிதழ்
ஆளுக்கொரு என்றும் நீதி
கேட்கவில்லை இல்லை நாதி
கல்வியின் பயனோ இன்று பாழ்

தனியோருவனை நம்பாது சாதியுலகம்
சார்புடமையே அதன் டாம்பீகம்
உள்ளிருந்தால் பயன்
வெளியே நின்றால் உடன்
தயங்காமல் காட்டும் கோரமுகம்

வளர்ப்போம் என்றும் மனிதநேயம்
தவிர்ப்போம் தேவையற்ற மனமாயம்
நாம் உருவாக்கிய சாதீ
அணையட்டும் மெல்ல அந்தத்தீ
அதுவே நம்மை மேலேற்றும் சத்தியம்

- செல்வா

பி.கு: தினமணியில் (கவிதைமனியில்) போட்டியில் பதிவு. லிமெரிக் வகையில் எழுதியது

Friday, March 25, 2016

நட்பு ஹைக்கூ


இணைந்த இதயங்களின்
கோட்டில் நடக்கிறேன்
நட்புடன்.

****

என்றும் சண்டை, சச்சரவு
விலகவில்லை என்றும்
அருமை நண்பன்

***
பல கரித்துண்டுகளுடன்
சில வைரங்கள்
கூடா நட்புகளுடன் நல்நட்புகள்

****

நட்பு இங்கு அதிசயம்
பேசாமல் பேசுவார்கள்
எஸ்.எம்.எஸ்ஸில்

***

வேண்டும் நண்பன் இதற்கு முன்
தூரமாய் நண்பன் இதற்குப் பின்
காதலுக்கு

***
இரயில் பயணமா
நெடுநாள் பயணமா
வேண்டும் நல்ல நண்பர்கள்

- செல்வா

சொல்


சொல்லின் தன்மை
சொல்லில் அடங்காது
சொல்லும் பொருளுடன்
செல்லும் அங்கே

சொல்லால் கருத்தின்
வில்லும் வளையும்
பல்பொருள் விளக்கும்
எல்லையும் கடக்கும்

சொல்லின் உண்மை
அல்லும் அகலும்
கல்லும் கரையும்

சொல்லின் பொய்மை
பொல்லாது புகழும்
இல்லாது இயம்பும்
புல்லும் புகழப்பெறும்

சொல்லின் வேகம்
நில்லாது ஓடும்
வல்லமை வடிவுறும்

சொல்லின் சிறப்பு
வெல்லும் எதையும்
நல்வினை நல்கும்

சொல்லா சொல்லும்
நில்லா ஓடும்
வெல்லும் சிலநாள்

- செல்வா

Wednesday, March 23, 2016

தேர்தல்


கொள்கையில் என்றும் முரண்பாடு
கொள்ளையில் கொள்ள உடன்பாடு
திட்டமென்ன திறனென்ன
கவலை வேண்டாம்
முதலில் தொகுதிகள் ஒதுக்கீடு

வாக்குகள் மாற்றும் தலையெழுத்து
அதற்கில்லை எந்த மாற்றுக்கருத்து
நாளை என்னும் கவலையேன்?
விலையென்ன விளக்கமாக சொல்
வீணாக தேவையில்லை வக்காலத்து

எங்கள் பேச்சில் தேனொழுகும்
பாதங்கள் கைகள் தொடும்
தேர்தல் உங்கள் காலம்
விலைக்கான சாத்தியம்
நம்புங்கள் எங்கள் சத்தியம்

- செல்வா

பி.கு: லிமெரிக் வகையில் எழுதியது 

சுயநலம்

சுயம் முக்கியம் என்றீர்கள் ஆனால்
ஒன்றும் புரியவில்லை
என் நலத்தில் சுயம்
என்றால் அது தவறா
என்ன சொல்ல நானும்
வளரும் அரசியல்வாதி தானே

- செல்வா

Tuesday, March 22, 2016

கண்டதும் காதல்


அறியாத வயது
தெளியாத மனம்
ஆசைகளுடன் நாட்டம்
தேவையில்லா ஆட்டம்
மாயத்தில் ஓட்டம்
மனதிலிருந்து வெகுதூரம்
வாழ்க்கை இருந்தும்
கண்டதும் காதல்
கொண்டது கோலம்

தெளிந்தப் பின்
மனம் அறியும்
கண்ட கண்ட காதல்
காணும் அலங்கோலம்

- செல்வா

மனஊஞ்சல்


கண்கள் கண்களுடன் உரசல்
மனதில் கேட்கும் பல கூச்சல்
எதை தேடினேன்
எதன்பின் ஓடினேன்
ஆசையிலாடுது இன்னும் மனஊஞ்சல்

ஆனந்தம் தந்த கண்களின் உருட்டல்
அதன் நினைவுகள் நெஞ்சில் மிரட்டல்
எண்ணங்கள் உருள
மனமும் மருள
உள்ளத்தில் உருவாகும் கனவுத்திரட்டல்

கையோடு கைகள் மெல்ல பரிசம்
உடலில் கண்ட சில கூச்சம்
மனம் ஒன்ற
நிலைகள் மாற
மதயானைக்கு வேண்டும் ஒரு அங்குசம்

- செல்வா

பி.கு: லிமெரிக் வகையில் எழுதியது

Monday, March 21, 2016

நட்பு


திருப்பிப் பார்த்தால் திகைப்பு
அறியாத இதயத்தின் துடிப்பு
புரியவில்லை இன்றும்
என்று அரும்பியதோ
வாழ்வில் நண்பா நம் நட்பு

நாளும் கண்டோம் பரபரப்பு
அங்கங்கு சில மூக்குடைப்பு
நாளும் கடந்ததும்
இன்றும் கண்டோம்
நெஞ்சில் நட்பின் இருப்பு

இருக்கும் இடம் கலகலப்பு
இருந்தும் கொடுத்த பல கடுப்பு
பிரிக்க பல இருந்தும்
இணைத்தது  ஒன்று
நல்கும் நட்பின் சிறப்பு

- செல்வா

பி.கு: லிமெரிக் வகையில் எழுதியது

ஹைக்கூ துளிகள் 4



பட்டும் புரியவில்லை
ஏட்டில் எழதவும் முடியவில்லை
தேவையில்லா ஆசைகள்

***

வேகமாக ஓடியும் அடையவில்லை
தூரம் கொஞ்சமும் குறையவில்லை
என் குறிக்கோள்

***

இன்றைப் பற்றி கவலை கொஞ்சம்
காட்சிகள் மங்கலாக தெரியுது - விடு
தூக்கம் இன்னும் தெளியவில்லை

****

வளர்பிறையில்லா முழுநிலவாய் வந்தாய்
தேய்பிறை மட்டும் காணுகிறோம்
மாத சம்பளம்

****

மல்லிகை வாசம் அறியவில்லை
நிலவை இரசிக்கவில்லை - கவலைவிடு
ஆயிரம் கவலைகளுண்டு

*****

பேசா மொழிக்கு ஆயிரம் அர்த்தங்கள்
அர்த்தம் கொஞ்சமும் புரியவில்லை
இப்படிக்கு அரசியல்வாதி

- செல்வா

இலவசம் எனும் வசியம்



வசியம் ஒன்று கண்டுகண்டோம்
அவர்கள் கைகொண்டு
அவர்கள் கண்கள் குத்த
வசியம் ஒன்று கண்டுகண்டோம்

ஈயென இரத்தல் இழிந்தன்று
ஈயேன் என்றல்அதனினும் இழிந்தன்று
என்ற மொழியில்
முதல் வரியில் நின்றவரே
எங்கள் வசிய மருந்து சந்தாதாரர்கள்

வசியம் ஒன்று கண்டுகண்டோம்
வள்ளல்கள் ஆனோம்
வள்ளல்கள் ஆனோம்
அவர்கள் பொருள்களை
அவர்களிடம் திருடி
அவர்களுக்கே சில வழங்கி

வசியம் ஒன்று வளர்த்தோம்
எதை தின்றால் பித்தம் குறையும்
எனும் மாந்தர்கள் உள்ளவரை
எங்கள் வசியம் வாசம் வீசும்

எங்கள் இலவசம்
எனும் வசியம் ஒரு மருந்து
மருந்தளவே உணவு உண்ணும்
மாந்தர்களே அதற்கு  விருந்து

எங்கள் இலவசம் எனும் வசியம்
எங்கும் வேலை செய்யும்
இலவசம் என்றால்
வசதி படைத்தவனும் வாங்கி வைப்பான்
இலவசத்தை எதிப்பவனும் ஈயென இழிப்பான்
எங்கள் வசியம் சக்தியே சக்தி


வசியத்தின் விலை கொஞ்சம் அதிகம்
கவலையில்லை எங்களுக்கு
அடுத்த தலைமுறைக்கு அதை
தள்ளிவிடுவதால்

குறைகள் கண்டு குமுறல்கள் உண்டு
வசியம் உண்டப்பின்
குறையில்லா மனிதர்கள் உண்டோ
என்று எண்ணி
நாளை நம் வாழ்வு மலரும்
நம்பிக்கையில் காலம் தள்ளும்
சக்திக் கொள்ளும்

வசியம் இன்னும் வளர்ப்போம்
வாழ்வின் வசியம் சாகும்வரை

-  செல்வா

Saturday, March 19, 2016

விருந்தாளி



ஓ.. விருந்தாளி
கதவு தட்டும் ஓசை
திறக்க மனமில்லாமல்
திறக்க முடிவு

வேண்டா விருந்தாளியா
எதையும் தூண்டும் விருந்தாளியே
மனத்தகவில்  என்றும்
எழுப்பும்  ஆசையோசையே

- செல்வா 

Thursday, March 17, 2016

ஏட்டுச்சுரைக்காய்


கூட்டுக்கு உதவா ஆயிரம் சுரைக்காய்கள்
நாட்டுக்குள்ளே நல்ல வியாபாரம்
கூட்டமாய் வாங்க பல ஆட்கள்
முட்டி மோதி வியாபாரப் புத்தியில்
கொட்டிக் கொடுத்தனர் இலட்சங்கள்
மாட்டிக்கொண்டு முழித்து
வெட்டி வேலைகள் செய்யும் பல ஆயிரங்கள் இருந்தும்

கிணற்றுத்தவளைகளை நம்பி
கணக்கில்லா பணத்தால்
சுணக்கில்லாமல் சம்பாதிக்க
கணக்கில்லா பயனில்லா சுரைக்காய் தோட்டங்கள்

பல பெயர்கள் உண்டு சுரைக்காயுக்கு
அதற்கென்று அதன் விலை

பணயம் வைத்து சுரைக்காயுடன்
மணற்கோட்டை நோக்கி என்றும் பயணம்
பணிகள் பல உண்டு
இணையா ஏட்டுச்சுரைக்காய் தரம்
இணையும் பல மூன்றாந்தர அரசியல்கள்

கூட்டுக்கு உதவாவிட்டாலும்
நாட்டுக்கு தேவை இன்னும் ஆயிரம் சுரைக்காய்கள் .

- செல்வா

பட்டறிவு



அறிவின் ஆழமது
நிறுத்தும் காலமெது
முறையாய் கற்றாலும்
மறைவழி உணர்த்தும்
நிறைவாய் நிறுத்தும்
அறிவுரையது பட்டறிவு

பட்டால் தான் தெரியும்
பார்வைக்கு பலவை என்றாலும்
பட்டுதான் தானே அறிய
காலமும் இங்கே காணாது
உடலும் மனமும் என்றும் தேறாது

அறிவின் ஆழம் ஏற்று
பார்வைகள்  பலவும் நோக்கு
பட்டதது உன்மேலோ  பிறர்மீதோ
அறிவைக் கொள் பட்டறிவாய்

- செல்வா 

Wednesday, March 16, 2016

காத்திருப்பு


ஆசைகளுடன் ஏக்கம்
நாளைய கனவுகளுடன்
நம்பாமல் நம்பி
காத்திருப்பு

நம்பிக்கையின் உச்சம்
காலம் கனிய
சந்தர்ப்பங்கள் நோக்கி
காத்திருப்பு

நாளும் காதல் பேசி
காதலிடம் காதல் கனிய
காதல் எண்ணி காதலுடன்
காத்திருப்பு

வர சொன்ன நண்பன்
வரவில்லை என்று
கடிந்து கொண்டு நண்பனுக்கு
காத்திருப்பு

காலை வேலைக்கு சென்ற
கணவன் மாலை மலர்களுடன்
புதுமனைவியின்  கதவருகில்
காத்திருப்பு

நாளை முதல் கோடைவிடுமுறை
என்றெண்ணி நாளது
கடக்க பிள்ளைகள்
காத்திருப்பு

இருப்புகள், நடப்புகள்  
ஆசைகள், இச்சைகள்
காதல், வாழ்தல்
உள்ளதது  காத்திருப்பு

கோபங்கள் தாபங்கள்
காயங்கள் மாயங்கள்
விருப்பங்கள் எண்ணங்கள்
காத்திருப்பில் உண்டு


விதைகள் விதைத்தவுடன்
மரங்கள் வளர்வதில்லை
கனிகள் காய்ப்பதில்லை

காலத்துடன் ஒன்றும்
காரியத்தில் ஒவ்வொன்றிலும்
காத்திருப்பு கட்டாயம்

  • செல்வா

Tuesday, March 15, 2016

விழிகள் பேசும்

மொழிகள் தெரிந்தும்
வழிவகைகள் இல்லாமல்
எழும் உணர்வுகளை
மொழிகள் உணர்த்தாவிடின்
விழிப்பு நிலையுடைய  
முழுமதி முகத்தின்
விழிகள் பேசும்

மொழிகள் தெரிய வேண்டாம்
சுழலும் எண்ணங்களையும்  
பழகிய மனதையறிய
பிழையன்றி தெரியும்
விழிமொழி பேச

- செல்வா

பார்வையே அழகு

பார்வையே அழகு
உன் பார்வையே அழகு
உன் பார்வையிலே அழகு
நீ பார்க்கும் பார்வையிலே அழகு

பார்வையில் ஒரு அழகு
பார்வையிடா பல அழகு
பார்வையே பொருளில் மட்டுமில்லை அழகு
பார்வையே நீயே அழகின் பார்வை

- செல்வா

Wednesday, March 2, 2016

மனைவி


தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன - தனதான

அன்பிற்கொரு நெஞ்சம் எனதாகி
வந்தப்போது வெல்லும் உனைதனை
சிந்தைக்காக ஒத்தும் பொருளாக நிலைமாறி

கள்ளம்என உள்ளம் எதிராகி
விந்தைக்கென விளையும் மனமாகி
விட்டுத்தின மோத்தும் நினைவாக உயிராக

உள்ளத்தனை உந்தும் உறவாகி
மாந்தர்தமை மல்கும் ஒளியாகி
நல்வாழ்கையை என்றும் நலமாகி தருவோமோ

- செல்வா
பி.கு: முத்தைத்தரு இராக அமைப்பு தர முயற்சி.

Tuesday, March 1, 2016

ஹைக்கூ துளிகள் 3


என்னடா இது நாடு
கேள்வி கேட்க நான் - ஒரு குரல்
சாருக்கு ஒரு டீ

*****

பல லட்ச சொகுசு கார் என்ன
பணிவாய் கடந்து செல்லட்டுமே
குழியும் பள்ளங்களும்

****

அன்பு மனைவி இறப்பு, அழுகை
ஆர்ப்பாட்டம் - கூப்பிடு
கல்யாண புரோக்கர்

*******

வாழ்வே என்றும் சுமை
பழகிக்கொள்ள வேண்டும் முதலில்
பள்ளி புத்தகச் சுமை

****

சுத்தமே நல்வாழ்வு
சுத்தமாக மரியாதையில்லை
துப்பரவாளர்கள்

****

கொடுக்க அவர்களும் தயார்
வாங்க இவர்களும் தயார்
வங்கிக் கடன்

- செல்வா

காதல் சிந்து


கண்ணாலே மெல்ல பார்க்க - கனி
====மொழி சொல்லாமல் பறந்தது
திண்டாடுது இந்த இளசு - நல்ல
====பதிலுக்கு ஏங்குது மனசு

சொன்னாளே நல்ல வார்த்தை - நானும்
====தரையில் கால்படாமல் பறந்தேன்
தன்னாலே நிலையும் மாறுது - கண்ணே
====கவிதைகளும் நன்றாக ஊறுது
.

- செல்வா

பி.கு: சமநிலைச் சிந்து வகை சார்ந்தது
சமநிலைச்சிந்து - அளவான சீர்களைக் கொண்டு நடப்பது இது; தனிச் சொல்லின் முன் உள்ள அரையடியும், பின் உள்ள அரையடியும் தம்முள் அளவொத்து விளங்குவது.

கும்மிபாட்டு


ஆயிரம் கனவுகள் கண்டோம் - நல்ல
-------ஆனந்தம் கண்டு நின்றோம்
ஆசைகள் அங்கு வளர்த்தோம் - தேடாமல்
-------அர்த்தங்கள் இல்லாமல் தொலைந்தோம்

பேசாமல் மௌனியாய் நின்றோம் - சிலநேரம்
-----பேசிபேசி வார்த்தைகள் கொன்றோம்
முண்டியடித்து கொண்டுமுன் சென்றோம் - உள்ள
-----முரண்களில் பின்னுக்கு வந்தோம்

- செல்வா

பி.கு: இயற்கும்மி வகை சார்ந்தது

ஓரடியில் ஏழு சீர்கள் அமையும். அது 4 சீர், 3 சீர் என மடக்கி எழுதப்படும். இவ்வாறு 2 அடியும் 4 வரியும் கொண்டதாக அமையும். முதற்சீரும் ஐந்தாம் சீரும் மோனை பெறும்.
மூன்றாம் சீரும் ஏழாம் சீரும் இயைபுத் தொடை அமையப் பாடப் பெறுவதும் உண்டு.

இயற்கும்மிகும்மிபாட்டு
திருத்து | நீக்கு