Monday, December 28, 2020

 

மனக்கணக்கு
=============
எத்தனை கணக்கு
எத்தனை கணக்கு
சொல்லாத பல மனக்கணக்கு
வருவதை வேண்டி சில
வர வேண்டடியதை எண்ணி சில
வேண்டாமல் வந்த சில
ஆசையில் மயங்கி சில
அறிவுக்கு அடங்கி சில
கற்பனையில் வடிந்த சில
தெரிந்து கொண்டு சில ஈடுபாடு
தெரிந்தும் தெரியாமலும்
வந்த பல இடர்பாடு
இருந்தும்
மாளாத மனக்கணக்கு

Sunday, December 27, 2020

 பயணங்கள்

===========
புதிதாக பயணங்கள் என்றும்
புரிந்தும் புரியாமல்
புதிர்கள்பல பொதிந்தது என்றும்
காண இயலாததையும்
மனதிற்கு ஒவ்வாததும்
கண் முன்னால் நின்றாலும்
கண்மூடி நின்றேன்
கண்மூடித்தனமாக மறைத்தேன்
புதிராக இன்றும்
தொடரும் பயணங்கள்

Thursday, December 17, 2020

 இயல்பு

=======
மனம் எதிர்கொள்ளும் நிலையோ இயல்பு
வாழ்வுடன் நடந்து செல்வதோ இயல்பு
புரியும் எதிர்வினையின் சராசரியோ இயல்பு
எனை எடுத்துரைப்பதோ இயல்பு
தனித்துவத்தை நிர்ணயிக்குமோ இயல்பு
மாறும் மனம் தேடும் அறிவு உள்ளவரை
நாளும் இயல்பாய் மாறும் இயல்பு
வேண்டும் எதையும் எதிர்க்கொள்ளும் இயல்பு

Wednesday, December 16, 2020

 

உரைக்கா எண்ணம்
==================
உரைக்கா எண்ணம் என்றும்
உண்டு நெஞ்சினிலே
ஏனோ அதெழும்
ஏனோ சொல்ல இயலாமல் விழும்
தேவையின்மையோ...
இயலாமையோ...
பொறையுடைமையோ...
சூழ்நிலையோ...
சந்தர்ப்பமோ...
சந்தேகமோ...
சந்தோஷமோ....
இயல்போ...
எதிலும் சேர்க்கலாம்
எல்லாவற்றையும் சேர்க்கலாம்
உரைக்கா எண்ணம் என்றும்
உண்டு நெஞ்சினிலே
உறைக்காவரை
உறையும் அதன் திண்ணம்
சில தினங்கள் உந்தும்
சில தினங்கள்
உடைக்கும் நெஞ்சை
சில தினங்களில்
சொல்லாமல் மறையும்
உரைக்கா எண்ணம் மற்றொன்று
உடன் உதிக்கும்
உரைக்கா எண்ணம் என்றும்
உண்டு நெஞ்சினிலே
உழன்று கொண்டே இன்றும்

 அதுதானே

=========
அதுதானே எனக்கு தெரியும்
அழுத்திக் கேட்டால்
அதுதானே எனக்கு கொஞ்சம் தெரியும்
கேள்விகள் சில கேட்டால்
அது மட்டும் கொஞ்சம் தெரியாது
கேள்விகள் பல கேட்டால்
எல்லாம் தெரிந்தவன் எவன்
எடுத்து சொன்னால் புரியாதவனா இவன்
அதுதானே படித்தால் புரியும்
இதென்று மற்றோன்றுக்கு தாவ...
அதுதானே எனக்கு தெரியும்

Tuesday, December 15, 2020

 

கற்பனை உலகம்
================
இயல்பை இயல்பாய் உடனிருந்து
மறக்கடிக்க செய்யும் உலகம்
ஆசைகளின் அடுக்கில்
அமைந்த உலகம்
உண்மையை எதிர்கொள்ளா
அச்சத்தின் அடித்தளத்தில்
அமைந்த உலகம்
உண்மையை என்றும் மறுக்கும் உலகம்
கண்ணைக் கட்டிக் கொண்டு
தன்னை மையமாய்
தன்னை மறக்கடித்து
தான் மட்டும் வாழும் உலகம்
எல்லோருக்குமான உலகம்
எவரும் காணா உலகம்
விண்ணுக்கும் மண்ணுக்கும்
இடையில் உள்ள திரிசங்குலகம்
கற்பனை உலகம்

 இனிது... கொடிது...

==================
இனிது இனிது நிந்தன் குரல் கேட்டல்
அதனினும் இனிது என்னுடனுன் உரையாடல்
அதனினும் இனிது காதல்மொழி பேசல்
கனவிலும் நனவிலும் அதுவே என் எண்ணம்
கொடிது கொடிது நின்னை காணாதிருத்தல்
அதனினும் கொடிது எனைக் கண்டும் காணாதிருத்தல்
அதனினும் கொடிது நீ சொல்லும் விளங்கா காரணம்
அதனினும் கொடிது நீ கொள்ளும் கோபம்
அதனினும் கொடிது விலகிச் செல்லுதல்

Thursday, December 10, 2020

 

கனவுடன் காதலி
=============
மணலைத் திரித்து கயிறாக்கி
மலைகள் பல இழுப்பேன் உன்
மடியில் தலைசாய்ந்தால்
என்றான் காதலன்...
அவளோ கணக்காய் ...
கனவுகளில் வாழ்வைக் கரைத்தாய்
கலைந்தால் கவிதைகள்
சில படித்தாய்
நீரிலே உந்தன் பெயர் எழுதி
நீங்கா புகழுடன் வா
காலம் காத்திருந்தால்
காணலாம்

Monday, November 2, 2020

 சொற்கள்

=========
சொற்கள் பல சொல்லியது
ஆனால் எல்லாம் சொல்லி தீராது
சொற்கள் பல பயனற்று பறந்தது
சிலவற்றை சொல்லி மாளாது
ஏனோ சில சொல்ல மீளாது
சொற்கள் மட்டும் எல்லாம் எடுத்துரைக்காது
சொற்கள் சில சுடாமல் வீடாது
சொற்கள் பல இன்னும் சொல்லும்

Tuesday, October 20, 2020

 

தன்னிலை விளக்கம்
===================
தன்னிலை விளக்கம் தருவதேனோ
தன்னை முன்னிறுத்தலோ
தன் தரத்தை உயர்த்தவோ
தடுமாற்றத்தைத் தகர்க்கவோ
நிலை மறந்ததை நினைத்தோ
நிலை கொள்ளா நின்றதாலோ
கழிவிரக்கம் வேண்டியோ
சுற்றமது வேண்டும் என்றோ
சுற்றம் என்னை சுழலாற்றியது எனவோ
சூழ்நிலையென் சூதென்று உரைக்கவோ
நட்பை நிலைநிறுத்த நினைத்தோ
யாரையோ திருப்தி செய்யவோ
தன்னிலை விளக்கம் தருவதேனோ

 சொல்ல...

=========
சொல்ல வேண்டிய ஒன்று
என்றென்றும் தரும் ஊக்கங்கள்
சிலகாலம் அலுப்புத்தரும் சலிப்புகள்
சொல்ல தயங்கிய ஒன்று
எந்தன் தயக்கத்தின் விளக்கம்
சிலசமயம் அடிக்கொள்ளும் தாரமீகம்
சொல்ல நினைத்த ஒன்று
கனிய காத்திருக்கும் சமயம்
சிலவேளைகளில் வேண்டும் சாதுரியம்
சொல்ல தகாத ஒன்று
என்றும் உடைக்கும் உறவுகள்
சிற்சில நேரங்கள் அதுவே வேலிகள்
சொல்லாத எதோ ஒன்று
என்னையென்றும் எடுத்துரைக்கும்
சிலநாட்கள் நின்று இடித்துரைக்கும்

Sunday, October 18, 2020

 

நேரங்கள்
=========
ஆயிரம் எண்ணங்கள கொண்டு
சிந்தனை செலுத்தி திட்டமிட்டு
செலவிடா நேரங்கள் என்றும்
தன்னை மறந்து
அங்கிங்கும் மனம் அலைத்து
சிந்தை மறந்து திட்டமிடாமல்
செலவிட்ட நேரங்கள் என்றும்
திட்டமிட்டாலும் இடாவிட்டாலும்
திரும்பி செல்ல இயலா இடங்கள்
கணப்பொழுதில்
கடந்து சென்ற காலங்கள்
நிகழோடு நில்லாமல்
கடந்ததை கடங்காமல்
எதிர்காலத்தை எண்ணியே
கடந்து செல்லும் காலங்கள் என்றும்

Saturday, September 26, 2020

 

என்னைப் போல்...
=================
உன்னால் எனக்கு தினம் போராட்டம்
கண்டேன் பல தொல்லைகள்
உன்னால் ஏனோ
ஆத்திரத்தில் கோவத்தின் உச்சியில்
என் மேலாளர் உடன் அவனென் நண்பன்
எதை செய்யவில்லைஎதை செயதேன்
காரணம் அறியாமல் பாவமாய்
சிறுபரிதவிப்பின்றி தலைக்குனிந்து
மௌனமாய் நான்
சில நிமிடங்கள் செல்ல அவனே
என்னிடம் வந்து வா செல்லலாம்
தேநீர் அருந்த; சென்றேன் அவனுடன்
சிறுபுன்னகையுடன் நடந்ததைப் பற்றி
எந்த நினைவின்றி ....
அலுவல் முடித்து வீடு புகும் முன்
பலத்த மனைவியின் சத்தம்
எத்தனை முறை உனக்கு
சொல்லிக் கொடுக்க...
தப்பைத் தப்பாமல் செய்கிறாய்
உனக்கும் அறிவுக்கும் சம்பந்தமில்லை
என்று அழுத்தமாய் எங்கள் மகனைக்
சில அடியுடன் கடிந்தாள்.
காரணம் அறியாமல் பாவமாய்
சிறுபரிதவிப்பின்றி தலைக்குனிந்து
மௌனமாய் என் மகன்...
சிறுநேரத்தில் சாதம் ஊட்டினாள்
மனைவி; சலனமின்றி
சுவைத்ததுண்டான் உணவை
என் செல்ல மகன்...
காலை ஞாபகம் என் கண்முன்னே நின்றது
என்னைப் போல்....

Saturday, September 19, 2020

 

பொய்யர் வாழ்வு
================
தினம் சிலபொய்கள் பேசி
மனக்கணக்குடன் லாப நட்ட
கணக்குடன் வாழ்க்கையை
மனம் போன போக்கில்
கனவுலகத்துடன்
உண்மையின் இலக்கணத்தின்
தனக்கென பொருள் மாற்றி
வாய்மையை வேண்டிய
அளவு வளைத்து
தினம் சிலபொய்கள் பேசி
கேள்விகள் பலவுடன்
கேள்விகளற்ற வாழ்வடா
பொய்யரின் வாழ்வடா

Thursday, September 17, 2020

 

மனைவி
=======
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன - தனதான
அன்பிற்கொரு நெஞ்சம் எனதாகி
வந்தப்போது வெல்லும் உனைதனை
சிந்தைக்காக ஒத்தும் பொருளாக நிலைமாறி
கள்ளம்என உள்ளம் எதிராகி
விந்தைக்கென விளையும் மனமாகி
விட்டுத்தின மோத்தும் நினைவாக உயிராக
உள்ளத்தனை உந்தும் உறவாகி
மாந்தர்தமை மல்கும் ஒளியாகி
நல்வாழ்கையை என்றும் நலமாகி தருவோமோ

Monday, September 14, 2020

 

உணர்வுடன் நீ
=============
சந்தம்:
தனதன தனதன தனதன தனதன
தனதன தனதன ...... தனதான
-----------------------------------------------------------------
மறந்தது உணர்வுடன் நினைவுகள் தருணங்கள்
கண்ணெதிரில் கனவுகள் ...... கலைந்தோட
திருமுகம் நினைவினில் உணர்வினில் உயிர்தனில்
கலந்தது நினைவுகள் ...... என்னுள்தானே
விடியுமென் இரவுகள் விடியல்கள் விரைவினில்
கண்ணெதிரில் உனைகண்ட ...... பொழுதாக
பிறவிகள் பலகண்டு இனிவரும் பொழுதினில்
கலந்து ணர்வினிலே உறைந்தது ...... எனவோட
உளமது இனித்தது நினைவுகள் சுவைத்தது
சந்தமுடன் கவிதைகள் வரும்தினம் ...... எனவாகும்.

Sunday, September 13, 2020

 பெட்டகம்

=========
திறந்து பார்த்தேன் எந்தன் பெட்டகம்
சேர்ந்து வைத்திருந்த பல புத்தகம்
படிக்கா இன்னும் சில புத்தகம்
படிக்கா இன்னும் சில பக்கம்
தேவையில்லா படித்த சில ஐதீகம்
ஏற்றி வைத்த சில வித்தகம்
எடுத்துரைக்கும் எந்தன் பன்முகம்

Wednesday, September 9, 2020

 

கதைமன்னர்கள்
=============
நுனிப்புல் மேய்ந்து
நூறுகதைகள் புனைய
கதைகள் வெறும் கதைகளல்ல
கணக்குகள் பலவுண்டு
வேண்டிய புள்ளியியல்கள்
திரித்த புள்ளியியல்கள்
புரியா புள்ளியியல்கள்
உடன் உள்கணக்குகள் ...
புனைந்த கதைகள்
புரியவேண்டாம் என்றும்
புரிந்தாய் நினைத்தாலே
கதைகளின் வெற்றி ...
கதைகளில் உண்டென்றும்
விவாத பொருள்கள்
வேண்டும் அறிவுஜீவிகள் சிலர்
அர்த்தங்கள் ஆயிரம் சேர்க்க
கதைகளின் சாரம் சிறக்க ....
இல்லாத கதைகள் பல புனைந்து
காவியம் காணலாம் உடன்
காவிய தலைவனை
கதைகள் வாழ்வில்
அர்த்தம் சேர்க்க
கதைகள் படைக்க பல
கதைமன்னர்கள் ....

Tuesday, September 8, 2020

 

தொடர்கதைகள்
===============
கேளா தொடர்கதைகள் பல
சிதறிய சிறு சிறுகதைகளாய்
அறிந்தும் அறியாமலும்
தொடர்புகள் அறுந்தும் அறுவாமலும்
நிகழ்வுகள் என்றும் நகர
இயல்பாய் நினைவுகளின் பதிவுகள்
நாளுக்கு நாள் மாறுபட
சில சிறுகதைகளும்
சிறுவாக்கியமாய் மாற
கேளா சிறுகதைகளும் சில
சொல்ல மறந்த கதைகளாய்
மெல்ல மறந்த கதைகளாய்
நாளும் தொடரும் தொடர்கதைகளாய்...

Monday, September 7, 2020

 சொல்லாத உண்மைகள்

======================
சொல்லாத உண்மைகள் பலவுண்டு
சொல்லாத காரணங்கள் என்னவென்று
சொல்ல என்னவென்று அறியவில்லை
சொல்லோடு செல்லா மனமென்று....
சொல்லாத பொய்கள் என்னவென்று
சொல்ல நினைத்தேன் அவையெல்லாம்
சொல்லோடு செல்லா செயல்கள்
சொல்லாத உண்மைகள் பலவுடன் ...

Sunday, September 6, 2020

 

தலையாட்டி பொம்மைகள்
=========================
அர்த்தம் அறியாமல்
ஆட்டும் எத்தனை
தலையாட்டி பொம்மைகள்
அர்த்தம் அறிய வேண்டாமல்
ஆட்டும் எத்தனை
தலையாட்டி பொம்மைகள்
அர்த்தம் அறிந்தும் தெரிந்து
ஆட்டும் எத்தனை
தலையாட்டி பொம்மைகள்
வாழ்க்கை ஈர்ப்பு
விசையில் உடன்
செல்லும் தன்மைகள்
உலகின் உரைக்கா உண்மைகள்

Friday, August 7, 2020

 

திசைதிருப்பிகள்
===============
நம்பிக்கை தந்த சிலரின்
உற்சாக வார்த்தைகள்
நெஞ்சசைத் தைத்த சிலரின்
ஏளனப் பேச்சுக்கள்
அறிவோடு போட்டியிட்ட சிலரின்
உள்ளார்ந்த உரைகள்
உள்ளதை எடுத்டுரைத்த சிலரின்
உளமார்ந்த அறிவுரைகள்
ஆசைகளை அடுக்கிய சிலரின்
ஆடம்பர வாழ்க்கைகள்
குறிக்கோளை உணர சிலரின்
அழுத்தமான வெற்றிகள்
அழுத்ததைக் குறைத்த சிலரின்
அசாத்திய அன்புகள்
எதையும் எதிர்கொள்ள செய்த சிலரின்
வெற்றி வைராக்கியங்கள்
ஆயிரமாயிரம் வாழ்வின்
ஓட்டத்தை மெல்ல மாற்றிய
திசைதிருப்பிகள்

Wednesday, August 5, 2020

 கவிதைகள் காணவில்லை

=========================
 
கவிதைகள் காணவில்லை
சில நாட்கள் ஏனோ
வந்து சேரா எண்ணங்களோ
வடிவிழந்த வார்த்தைகளோ
வலுசேரா மனவோட்டமோ
வாட்டும் தினசரி அலுவல்களோ
வாசம் மறந்தேனேனோ
வெற்றிடத்தில் சிக்கினேனோ
வந்தும் வாராமல் ஏனோ
கவிதைகள் காணவில்லை சில நாட்கள்

Friday, July 24, 2020

 தகவல் உலகம்

==============
விரல்நுனியில் விவரங்கள்
தரவுகள் விரைவில் வந்துவிழும்
வரைவொன்றும் கொள்ளாவிதம்
பெரும் தகவல்கள் பலவும் தரும்
முரண்பாடும் சிலவும் முந்தும்
அருமை தகவல் உலகம்
தகவல்கள் தவழும் சமூகவலைகள்
சகட்டுமேனிக்கு தரவுகள்
நீ அறிந்த தகவல்கள் எல்லாம்
மற்றவருக்கு அறிய செய்யும் எண்ணம்
தகவல் உலகத்தை கேலி செய்யும்
பகுத்துவம் என்றும் அறியாமல்
வருவதை எல்லாம் பகுத்தறியாமல்
இருப்புநிலை தன்னை உணர்த்த
பகிரும் பண்பாடு
தேவையில்லா பயன்பாடு
குழுமம் நோக்கமும் பயனும் அறி
பயனற்றத்தைப் பகிர்தலைத தவிர்
வீணாக எத்தனை வீடியோக்கள்
வீணாகும் தரவு பயன்பாடுகள் உடன்
வீணாகும் எத்தனை மணித்துளிகள்
உங்கள் தேவையறிந்தால்
தகவல்கள் என்றும் உங்கள் நுனிவிரலில் ...

Friday, July 17, 2020

 ஆனால் ....

==========
ஆனால்...
கற்பிக்கும் ஆயிரம் அர்த்தங்கள்
கலக்கம் கொள்ளும் அனர்த்தங்கள்
ஆனால்...
உணர்த்தும் பல தொடர்கதைகள்
கருத்துகள் சிலவுக்கிடும் முற்றுப்புள்ளி
ஆனால்...
இல்லாததை இடுத்துரைக்கும்
சொல்லாத ஒன்றை கொண்டுசெல்லும்
ஆனால்...
முடியாதை முடிச்சிடும்
முயற்சியையும் முடக்கிவிடும்
ஆனால்...
கருத்தில் ஆழம் தரும்
தடுமாற்றத்தை கண்ணில் காட்டும்
ஆனால்...
கருத்துகள் கவிதையில் உண்டு
ஆனால் ....

Wednesday, July 15, 2020

 அளவுகோல்கள்

==============
அளவில்லா ஆயிரம் அளவுகோல்கள்
பொது விதிகளில்லா பல போட்டிகள்
சமம் இல்லாதவர்களின் போட்டிகள்
போட்டிகளிட பல போராட்டங்கள்
ஆடாமல் சிலர்களின் வெற்றிகள்
வார்த்தைகளில் சமமான வாய்ப்புகள்
என்றும் ஆட்டங்கொள்ளும் அளவுகோல்கள்

Tuesday, July 14, 2020

தேடியவை
==========
நானோ எதைத்தேடி
எதோ என்னைத்தேடி
ஒன்றோடு ஒன்றறியாமல்
ஒன்றி வருகிறது ...
தேடியது சிலவை கிட்ட
கிட்டாத தேவைகளை
இன்னும் தேடி...
எட்டாத தேவைகள்
இன்னும் எத்தனையோ...
தேடாமல் கிட்டியவை
எல்லாம்
எனைத் தேடியவையோ...
வேண்டும் மாறாமல்
ஏற்றுக் கொள்ளும் மனம்

Saturday, July 4, 2020

 

அச்சம்
======
அச்சம் தவிர்த்தல் ஆண்மை
அஞ்சுவது அஞ்சாமை பேதமை
ஒடி ஒளிவதோ...
நாடி எதிர்கொள்வதோ...
அச்சம் அறிவது அறிவுடைமை
அச்சம் தரும்பல அபிப்பிராயம்
அச்சம் கொள்ள செய்யும் அலட்சியம்
கவலைக் கொள்வதோ...
கலங்காமல் இருப்பதோ...
அச்சம் அறிவது அவசியம்
அச்சம் கொள்ளும் தோல்வியொன்றில்
அச்சம் கொள்ளும் அறியாதொன்றில்
துவண்டு இருப்பதோ...
இல்லாதைக் கண்டிருப்பதோ ...
அச்சம் அறிவது மனதொன்றில்...
அச்சத்தின் காரணம் கடந்தகாலம்
அச்சத்தின் காரணம் எதிர்காலம்
நடந்தது எதோ...
நடப்பது எதோ...
அச்சம் இல்லாத நிகழ்காலம்

Friday, July 3, 2020

 முத்திரை

========
என்னை நான் அணுகும் அணுகுமுறை
என்றும் கொள்ளும் சொல்லா கேள்விமுறை
உணர்ந்தேன் பலதினம்
உலகவுடன் ஒத்துச்செல்ல
எனக்குள் இட்டேன் சொல்லும் நடைமுறை
நாலும் தெரிந்தாலும் என்றும் பந்தயகுதிரை
நாடாத பலவற்றில் இட்ட இடைத்திரை
தெரிந்ததிலும்
தெரியாததிலும்
நாளும் நான் பதிக்கும் முத்திரை
ஆய்ந்து ஆராயும் அடிப்படை
சிலசெயல்கள் காட்டும் சிலேடை
தேவைகள் என்னென்று அறிய
காரியங்கள் கைக்கொள்ள
வீரியங்கள் பலகொண்டு வீறுநடை

Wednesday, July 1, 2020

 தன்சார் பார்வை

===============
தன்சார் எண்ணத்தில்
தருணங்கள் கொள்ள
தப்பாமல் தாளமிட்ட
தனி ஆவர்த்தனங்கள்
எடுக்கும் தன்சார் பார்வைகள்
எல்லாம் எடுத்துரைக்க விட்டாலும்
எதை அறிந்தோனோ அதுவே
எடுத்துரைக்கும் தினம் எனை .

 புலியும் பூனையும்

=================
புலியைப் பார்த்து
பூனை சூடுக்கொண்ட
கதையுண்டு
புலிப்போல்
வேடம் அணிந்த
பூனையைக் கண்டு
பூனை என்ன
புலியும் தன்னை
சூடுக்கொண்ட
கதையும் காணலாம்

Wednesday, June 17, 2020

 நானே ராஜா

============
எனக்கு நானே ராஜா
எல்லோருக்கும் தூக்குவேன் கூஜா
நானென்ன ரொம்ப லேசா
திறமை வளர்ப்பேன் மூச்சா
அதையாக்குவேன் நல்ல பைசா
நாலும் உனக்கு தெரியவேணா
நல்லதா ஆளும் தெரியும்னா
இல்லையான ஒண்ணுக்குமுதவாத காலணா
எனக்கு நானே ராஜா
எல்லோருக்கும் தூக்குவேன் கூஜா
பட்டமும் வேணுமென் பின்னாடி
பகட்டும் கொள்ளுமேன் அங்காடி
பலநாள் நானுமொரு அடிபொடி
அறிவூற்று எந்தன் பேச்சு
அங்கங்கு அணியும்சில மண்ப்பூச்சு
அதிலில்லாமல் அவிழாதென் முடிச்சு
எனக்கு நானே ராஜா
எல்லோருக்கும் தூக்குவேன் கூஜா
மடை உடையாதென் எண்ணம்
மடமை கண்டுக்கொள்ளாதென் வண்ணம்
மற்றவருக்கு பணிபுரியும் ஆகரணம் (ஆகரணம் = ஏவலன்)
நானும் இங்கே வல்லவன்
நாளும் இருந்தும் இல்லாதவன்
நல்லதும் கெட்டதும் சொல்லாதவன்
எனக்கு நானே ராஜா
எல்லோருக்கும் தூக்குவேன் கூஜா
பி.கு: Independent Consultant அல்லது Self-employed வேலை செய்பவரின் நிலை மனதில் நிறுத்தியதில் வந்த கவிதை. பல விசயங்கள் தெரித்தும் அவர்கள் அது தெரியாதவரிடம் வேலை செய்யும் நிலை உள்ளவருக்காக நினைத்து எழுதியது

Monday, June 15, 2020

 

ஐயம்
=====
ஐயம்கொண்டு
ஆயிரம் கேள்விகள்
கேள்விக்குப் பதிலாய்
பல கேள்விகள்
ஆதாரங்கள் கொண்டாலும்
ஆதாரத்திற்கு ஆதாரம்
கேட்கும் ஆயிரம் கேள்விகள்
உண்மை தோற்றம்
உணர உதவுமா?
உண்மைக்கும்
நம்பிக்கையுக்கும்
இடையில் எந்தன் அறிவா?
உடன் எந்தன் செயலோ?
நம்பிக்கை எந்தன்
உண்மைதாங்கியா?

Sunday, June 14, 2020

 

அகநிலை உலகம்
================
புறநிலை யதார்த்தம்
புரிந்ததும் புரியாததால்
அறிவாய்வியல் பல
என் அறிவிற்கு
அப்பால் உள்ளததால்
உணர்ந்ததே என் உலகமானது
படிக்கும் தேற்றம்
அனுபவ தோற்றம்
புரிதலில் மாற்றம்
எந்தன் உலகை மாற்றும்
உந்துசக்தியாய் இன்னும்
அகநிலை உலகத்தை
மாறாமல் மாற்றிக்
கொண்டுள்ளது

 

செல்வாக்கு
===========
நித்தம் நெஞ்சினில்
என்னை சுமந்து என்னில்
அன்பை மட்டும் பொழிந்து
எந்தன் தன்மையில்
அன்னையின் செல்வாக்கு
சித்தம் தன்னில்
என்னை சிறக்க தன்னை
மெல்ல தன்னை கரைத்து
எந்தன் வளர்ச்சியில்
தந்தையின் செல்வாக்கு
சத்தம் பலகொண்டு
மகிழ்ச்சியும் சண்டையும்
நட்பை மாறாமல் வழங்கி
என்னை என் நிலையில்
நண்பர்களின் செல்வாக்கு
நிமித்தம் அறிவில் நிறுத்தி
குற்றம் குறைகளைக் களைந்து
எந்தன் அறிவின் ஆற்றலில்
நல்லாசிரியர்களின் செல்வாக்கு
மாற்றின எந்தன் நோக்கு
மாற்றின வாழ்வின் போக்கு

Saturday, May 30, 2020

தேவை

எழும்பாத வண்ணமாய்
எத்தனை ஆசைகள்
எத்தனை கனவுகள்
புழக்கமாய் வடிவாய்
வழக்கமாய்
வளர்ந்து மடிந்தது
தேடி அலையாத
தேவையென்ற
வரையறையாய்

Saturday, May 23, 2020

அவன்

 

பட்டது போதும் என்றேன்
பட்டால்தான் தெளியும்
அறிவு என்றான் அவன்
பட்டுதான் தெரிய வேண்டுமா என்றேன்
பகுத்தறியாது பட்டால்மட்டும்
பயனென்ன என்றான் அவன்
பகுத்தறிந்தால் எல்லாம் புரியுமா என்றேன்
புரியாத ஒன்றையெப்படி
பகுத்தறிவாய் என்றான் அவன்
புரியதான் என்ன செய்ய வேண்டும் என்றேன்
புரிந்தப்பின் என்ன செய்வாய்
என்றான் அவன்
புரியாமல் காரியங்கள் செய்லாமா என்றேன்
பட்டுதான் எல்லாம் உனக்கு
புரியும் என்றான் அவன்
என்றும் என்னை
எதிர்கொண்டு
எதிர்கேள்வி கேட்கும்
என்னுள் என்றும் அவன்

Friday, May 22, 2020

நேர்கோடுகள்

நிறைய காரியங்கள் செய்ததுண்டு
நிறைவைக் கண்டது எத்தனை
உரிய செயல்கள் செய்ததுண்டு
உயர்வை உய்த்தது எத்தனை
தேனொழுக வார்த்தைகள் பேசியதுண்டு
உள்ளத்தை தொட்டது எத்தனை
இயலாமல் இடித்துரைத்தது பலவுண்டு
இயன்றபோது செய்தது எத்தனை
நெஞ்சமறிந்து செயல்கள் பலவுண்டு
இணைந்த நேர்கோடுகள் எத்தனை

Wednesday, May 20, 2020

நினைவுகள்

நினைவுகளின் நீரோடையில் நீந்தி
நித்தமும் நிந்தன் நினைப்பே
அசைவுகளில் அனைத்திலும் அழகான
இசைவுகள் எனை இழுக்கும்
இணையிவள் என்றே நெஞ்சம் துடிக்கும்
கண்கள் காத்திருக்கும் கனிவுமொழி காண
சிந்தனையெல்லாம் என்றும்
சிறகடிக்கும் உந்தன் நினைவுகள்

Wednesday, May 13, 2020

விமர்சனங்கள்

தெரிந்ததோ தெரியாததோ
புரிந்தும் புரியாமல்
பல விமர்சனங்கள்
அதன்மேல்
பல விவாதங்கள்
தேவை அறியாமல்
மேலும் பல விமர்சனங்கள்
சமூக வலைதளத்தின்
வட்டத்தில் ....

Sunday, May 10, 2020

அன்னை

மனதோடு மறவாத
மனதின் மத்தியில்
வீற்றிருக்கும் உந்தன் எண்ணம்
தியாகம் எனும் சிறுவார்த்தையில்
திண்ணிக்க இயலாது
அன்பெனும் சிறுகூட்டிலே
அடைக்க இயலாது
எந்தன் உயிரில்
உறைந்திருக்கும் ஒரு
உன்னதம் நீயே...
மனதோடு மறவாத
அன்னையே

Saturday, May 9, 2020

சொல்

பொருளுடன் பொதிந்த
சொல்லும்
பொருளைப் பொறுப்பட்டாத
சொல்லும்
சொன்னதுண்டு
சொல்லால்
சுட்டதுமுண்டு
சுட்டுப்பட்டதுண்டு
சொல்லும் சில என்..
செல்லும் உணர்வின் வேகத்துடன்
சொல்லால் என்
உணர்வும் சில வேகம்
கொள்ளும்
சொன்ன சொல்லும்
சிலநாட்கள்
என்னைக் கொல்லும்
சிலநாட்கள்
என்னை வெல்லும்
சொல்லுக்குள் ஒளிந்த
பொருளாய்
பொருளுக்குள் ஒளிந்த
சொல்லாய்
சொல்லத்தான் என்
சொல்லின் ஆசை

சமத்துவம்

சமமற்றவை பலவற்றை
பேதம் மறந்து
சமமாக ஏற்கும் ஒத்தநிலை
சமத்துவம்
சமத்துவம் காணா
நிலைகள் உண்டு நம்மில் பல
சமரசம் கொள்ளா நிலையில்
சமத்துவம் காண்போம்

Thursday, May 7, 2020

அனுமானம்

அறிவின் ஆழங் கொள்ளா
அனுமானத்தின் அடுக்குகள்
ஆயிரங்களில் அமைந்த என்
அத்தனை தேற்றங்கள் மற்றும்
அதன் தோற்றங்கள்
அயர்ந்த பல அலசல்கள்
ஆராய ஆராய
ஆழமாக மேலும் கூடின
அனுமானத்தின் அடுக்குகள்

அடக்கம்

அடக்கமும் அறியாமையாய்
அல்லது ஆணவமாய்
அரங்கேறும்
தற்பெருமை பேசும் உலகில்...

Monday, May 4, 2020

ஆரவாரம்

 

மெல்ல மெல்ல குறையும்
மனதின் ஆரவாரம்
கடிகார முள்ளின் ஓசையும்
தெள்ள தெளிவாய் கேட்கும்
உன்னை உள்நோக்க...

Thursday, April 16, 2020

கவிவிளக்கு

காதலெனும் கருத்து
கவிவிளக்கைத் தூண்டியது
கருத்தின்மேல் காதல்
கவிவிளக்கை ஒளிர உதவியது
வார்த்தையின் கோர்வை
கவிவிளக்கில் வடிவம் தந்தது
உணர்வின் உந்துதலே
கவிவிளக்கில் உண்மைக் கொண்டது

Sunday, April 12, 2020

நடைமுறை நடிப்பு

 எதையோ எதிர்பார்ப்பில்

நாளடைவில்
கொள்ளும் நடிப்பே
வாழ்வில் இயல்பாய்
கொள்ளும் தோற்றம்
நாளடைவில்
நடிக்காததே நடிப்பாய்
நடைமுறைக் கொள்ளும்

Friday, April 10, 2020

நாளும் கடந்து செல்லும்

 

நாலும் கடந்து செல்ல
நாளும் காணும் மாற்றம்
நாள் முழுவதும் கூட்டில்
நம்மை நாமே சிறைவைக்க
குடும்ப உறவின் முழுநிலை
உணர்த்த நம் நிலையில் மாற்றம்
இந்த நாளும் கடந்து செல்லும்

Thursday, April 9, 2020

கற்களின் ஓலம்

 

உளி தாங்கும் கல்லே
சிலையாகும்
என்றே
எத்தனை கற்களைத்தான்
சிதைப்பாய்
என்று
கலையும் சிலையும்
வேண்டா கற்களின் ஓலம்

Thursday, March 19, 2020

கோரனா

எல்லையில்லா
உலகம் கண்டு
தொற்றித் தொற்றி
அசுர தோற்றம்
கொள்கிறாய்
ஆயுள் பல கொன்று
அச்சத்தை வித்திட்டு
நாளும் மெல்ல
எங்கள் வாழ்வைக்
கொல்கிறாய்
மக்களை மக்களிடம் விழக
வந்துவிழும் ஆயிரம் ஆலோசனைகள்
எத்தனை அதில் படிப்பினைகள்
எத்தனை காலத்தின் கொடுவினைகள்
சமூக வலைதளத்தின் போதனைகள்
அகிலம் முழுவதும்
ஆயிரம் கைகள் இணைய
ஆயுத்தம் கொண்டு
வீழ்த்துவோம் உன்னை
உறுதிக் கொண்டு

Friday, February 28, 2020

உள்ள விளக்கு

கண்டது பலவும்
கலந்த வாழ்வின் போக்கு
காண்பது என்றும்
சொல்லும் மனதின் கணக்கு
மெல்ல மாறவும்
காணும் பார்வையின் நோக்கு
கண்ட மாற்றமும்
மாற்றிய வாழ்வின் இலக்கு
இதனிடையில் நிற்கும்
காக்கும் சொன்ன வாக்கு
உயர்த்தி நிற்கவும்
ஒளிரும் உள்ளத்தின் விளக்கு

Tuesday, February 25, 2020

உள்நோக்கு

சொல்லாது ஏதொன்று
உள்ளத்தில் என்றுமொன்று
எனை உறுத்தும் தினம்
சொல்ல முனையும் போது
சொல்லாமல் அதுதன் உருமாறும்
சொல்லாமல் இருந்தாலும்
என்னுள் என்றும் உள்நோக்கும்
என்னை எடுத்து சொல்லும்

Friday, February 21, 2020

ஆண்டுகள்

சிந்தையின் செருக்கில் மாற்றம்
சிரத்தைக் கொண்டு
சேர்ந்தது சில
மறவாது மனதில்
ஆயினும் செல்லாக்காசாய்...
இந்த காலம் கண்டது
இதுண்டோ பட்டியலிட்டு
எந்தன் காலம் தன்னை
என்றும் புகழ்ப்பாட ...
கேட்ட புது பாடல்கள்
எல்லாம் பழுதாகவில்லை
ஆயினும் பழையன
ஆகியது
ஆண்டுகள் பல உருண்டோட...

Monday, January 27, 2020

படும்பாடு

வரவோ பலமடங்கு உயர
வாழ்வின் நிலை மேலும் உயர
நாளும் பிறரை ஒப்பிட்டு
படும் பாட்டைக் கேளுங்கள்
உருளும் எண்ணங்கள் பலகொண்டு
ஆசைகளும் தேவையாய் மாற
தேவைகளும் இலக்கணம் மாற்ற
பொருள்களும் தேவையைத் தாண்டும்
படும் பாட்டைக் கேளுங்கள்
விழுவது கிணறென்று அறிந்து
எல்லோரும் விழ
சிறுபிள்ளைக்கு இலட்சங்கள்
வேறுவழியின்றி கல்விசெலவு செய்யும்
படும் பாட்டைக் கேளுங்கள்
இல்லாத விலையை
இருப்பதாக எண்ணி எல்லோருடன்
பல இலட்சங்களுக்கு வட்டி
கட்ட அடுக்குமாடியில் வீடு
வரவுக்குள் செலவு நிலைமாறி
வரவுக்குள் வட்டி கட்டும் நிலைகொண்டு
படும் பாட்டைக் கேளுங்கள்

Sunday, January 26, 2020

ஒப்பீடு

ஒப்பிட்டு கொண்டே
தினம் வளர்த்தோம்
திறமைசில வளர்த்தோம்
ஒப்பிட்டு பலதருணம்
தினம் தளர்த்தோம்
திறன்பல மறந்தோம்
ஒப்பீட்டிலே வாழ்வின்
வெற்றியை நிர்ணயித்தோம்
வெற்றியை மட்டும் ஏனோ
ஒப்பிட்டாய் கொண்டோம்
ஒப்பீட்டிலே தோற்காமல் பல
வாழ்விலே தோற்றோம்
ஒப்பீட்டிலே நம் அவலம் பிறர்கொள்ள
மனத்தைத் தேற்றினோம்
ஒப்பாத ஒன்றை சொல்லி
ஒப்பிட்டு பெருமைக் கொண்டோம்
ஒப்பீட்டிலே ஒப்பாத வாழ்வையும்
ஒப்பிட்டு ஏற்றோம்

Tuesday, January 14, 2020

குறை

 

என்னை அறிய
ஆராய்ந்தேன்
எந்தன் குறையை
ஆராய ஆராய
என்னை நானே
மறைத்தேன் மேலும்
ஒரு குறையாய்