Monday, February 29, 2016

ஹைக்கூ துளிகள் 2


மின்னல் வெட்டுகள்
சூடு இன்னும் தணியவில்லை
ஏழையின் வயிறு

****

கூரைமேல் ஏறி ஓட
எட்டியும் வெளியே பார்க்கவில்லை
இரவில் மழை

****

காலை கதிரவன்
ஒளி ஊடுவுருவ முடியவில்லை
பனிமூட்டம்

****

எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்
சொன்னவர்களில் பல மன்னர்கள்
ஜனநாயகம்

****

நாளும் மாற்றம் தோற்றத்தில்
இருந்தும் நான் மாறாதவள்
வான்நிலவு

*****

மின்சாரம் துண்டிக்கப்பட்டது
இரவும் அழகாய் தெரிந்தது
மெழுகுவர்த்தி ஒளியில்

****

ஒட்டடை அடித்தும்
தெளிவாக தெரியவில்லை
அசைபோடும் நினைவுகள்

****

வீடும் நாடும் கடந்தேன்
நாளைய ஒளி தெரியவில்லை
நாளும் நகர்கிறது

***

கனவில் பல வெற்றிகள்
களிப்புடன் கொண்டாட்டம்தான்
அலுப்பு இன்னும் தீரவில்லை

*****

அரசனாகிருக்க ஆசை
காலை சலூன் சென்றேன்
எப்போது போல் இப்போதும்

- செல்வா

சமையல் - லிமெரிக்


நான் செய்ய நினைத்தேன் தளிகை
வாங்கி வந்தேன் சில மளிகை
சமையல்காரன் வேசம்
சமையல்கூடம் நாசம்
மனைவியின் கையில் உலக்கை

****

காலாற நடந்தேன் சில தூரம்
வயிறு புடைக்க சாப்பிட்டேன் ஸ்வீட் காரம்
நாளும் நடந்தும் பயனில்லை மாறாக
வேகமாக ஓடணும் இப்போ
வயிற்றுக்குள்ளே நல்ல சேதாரம்

****

அம்மாவுக்கு ஒரு ஆசை
அன்புமகள் கையால் ஒரு தோசை
சுட்டது வட்டமில்லை
ஒன்றொன்று ஒட்டவுமில்லை
தோசையில்லை கிடைத்தது அழுகையோசை

- செல்வா

பி.கு: லிமெரிக் நகைச்சுவை கலந்து படைப்பு

மனநிலை


நாரும் இங்கு மணக்கும்
பூவின் அருமை உணர்த்தும்
தேவையிங்கு மாற
வேண்டியவை வேண்டாவையாக
பூவும் இங்கு நாறும்

****

நாளும் இரவில் உலா
முன் நின்றும் தெரியவில்லை நிலா
வரவுகள் இருக்க
லாபம் கணக்கில் தெரிய
தேவை என்றதும் வேரிலே பலா

****

தீராமல் மனதின் தாகம்
கொள்ளும் மனதில் வேகம்
கண்ணைக் கட்டும்
எல்லையதும் மீறும்
தழலாய் எரியும் மோகம்

****

மனதோடு மெல்ல உரசல்
வயிற்றில் கரைசல்
தாவும் மனம்
தேடும் தினம்
கண்ணோடு கலந்த காதல்

- செல்வா

பி.கு: லிமெரிக் வகையில் எழுதியது

Sunday, February 28, 2016

ஹைக்கூ துளிகள்


இரகசியம் அறிந்தேன்
வாழ்ந்தாலும் இறந்தாலும் சத்தம்
இலைகளும் சருகுகளும்

மென்மையும் அழகும் ஆபத்து
சிலையோ தலையோ இறுதி
வண்ணப்பூக்கள்

அதிகாலை அற்புதம்
கடற்கரை அருகில் ஓட்டம்
தாகம் இன்னும் தீரவில்லை

மூலை முடுக்கெல்லாம் தேடி
வெளியே துரத்தி விடும்
அம்மா கையின் துடைப்பம்

ஆயிரம் மணித்துளிகள்
மீண்டும் நிசப்தம்
நண்பர்கள் பேச்சு

புல்வெளி மைதானம்
ஒவ்வொரு பனித்துளிகளும்
ஒரு உலகம்

ஞாயிறும் என்னோடு
விடியல் என்ற துவக்கம்
சேவல் கூவல்

தோலுரித்து காட்டினால்
என்றும் எனக்கு ஆபத்து
பழங்கள்

விடாது துரத்தும்
ஆனந்தம் என்றும் நெஞ்சில்
வட்ட நிலவு

தொட்டதெல்லாம் பொன் ஆனது
சிலநேரம் மண்ணானது
மழை

- செல்வா

Saturday, February 27, 2016

இயற்கையில்


நேசம்தரும் மலர்களே - உங்கள்
தோட்டத்தில் வேலிகள் உண்டு
திசையறியா காற்றும் வந்தது - வாசமது
வேலிகள் எல்லாம் தாண்டுதே

வானில் மாறாமல் வலம் - ஒளிகள்
ஒளிர்வதே உந்தன் உன்னதம்
ஏனோ மேகத்தில், பகலில் - வீண்மீன்கள்
கண்ணில் காணாமல் மறையும்

- செல்வா
பி.கு: - நொண்டி சிந்து வகையில் எழுதியது

Friday, February 26, 2016

என் தலைவன்


சுருங்க அறியவும் என் தலைவன்
கருத்தும் கொள்கையும் கொண்டு
ஒருங்கும் செயல்களும் கண்டு
அரங்கேற்றம் கொள்ளும் அதிர்வேட்டு

பன்முக பரிமாணம் பகர்வான்
முன்னின்றி காரியம் கொள்வான்
தன்மையுடன் கருத்து உரைப்பான்
தன்னையறிய தலைவன் ஆனான்

தளாராத முயற்சிகள் கொண்டான்
ஒளிரும் வெற்றி கொய்தான் - இன்று
வளர வளர வளைந்தான்
தளர தளரும் அவன் கொள்கைகள்

தன்னையறிய தலைவன் ஆனான்
உன்னையறியா செய்யவதிலும்…

உணர்வின் வழியில் சிலஅடியவர்கள்
உணரா வகையில் பலஅடியவர்கள்
துணை வழியில் சிலஅடியவர்கள்
பணலாபம் காணவேண்டி பலஅடியவர்கள்
உண்டு செய்து உழன்று கொண்டுள்ளான்

ஏழையின் தேவைகள் அறிவான் - அதிலவன்
பேழையை நிரப்ப வழிகொள்வான்
ஊழியம் புரியவே பிறந்தாகச் சொல்வான்
விழியில் விரலை விட்டு ஆட்டுவான்
பழிகளைப் பிறர்மேல் பிறாமல் இடுவான்

கள்ளத்தனம் கலங்காமல் செய்வான்
புள்ளியியல் பொய்யாய் அள்ளித் தெளிப்பான்
கள்ளுக்கடை திறப்பான் வந்த செல்வத்தில்
வள்ளல் வடிவம் பெறுவான்

தலையெழுத்து மாறுமென்று நினைக்க
தலையெழுத்தாய் அவனே மாறினான்

- செல்வா

காதலும் பழமொழிகளும்


உளவு கொள்ளாமல்
இளம் நெஞ்சை
களவு கொண்டாய்

கள்ளி நீ என்றதால்
முள்வேலி இட்டாயோ
தள்ளிதான் விட்டாய் அதன் மேலே

விடாது பார்வையில்
அடாது செய்தாள்
படாது படுத்தினாள்

காதல் உரலில் அகப்பட்டதால் நான்
வேதனை உழக்கைக்கும் தப்பவில்லை
யாதனையும் மாறவில்லை

கண்ணே நீ
கண்டால் ஒரு வீச்சு
காணாவிட்டால் ஒரு வீ ச்சு
இதில்லை வேறு பேச்சு

காதல் பாம்பை மிதித்து விட்டாய்
மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?

கனிந்த காதல்பழம்
தானே விழும் அறிவேன்
மானே பதில் சொல்

- செல்வா

பி.கு: பழமொழிகள் படிக்கும் போது உதித்த கவிதை

பழமொழிகள்:

உளவு இல்லாமல் களவு இல்லை
கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்!
அடாது செய்தவன் படாது படுவான்
உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
கனிந்த பழம் தானே விழும்
மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?

யாதனை - நரக வேதனை

இரசிகன்


பாலைக் காணவில்லை
பதற்றத்தில் அம்மா
பாலாபிஷேகம் செய்ய
வைத்த பாலாடா என்று
மகனிடம் சொல்ல

மகனோ பால் பசிக்கும்
குழந்தைக்கு கொடும்மா
அதை விட்டு
கல்லுக்கு விரயம்
செய்யாதே ...

சொல்லாதே அப்படி
ஆகிவிடும்டா சாமி குத்தம்
என்று அம்மா

மகனோ
மெல்ல மெல்ல
ஏறினான்
பொழிந்தான்
பாலை
தன் கதாநாயகனின்
பசிக்கொண்ட
கட்-அவுட்டுக்கு …

- செல்வா

Wednesday, February 24, 2016

வானவில்



சிதறலும் சில சமயங்களில்
கண்ணைக் கவரும் கவிதையாய்
வார்க்கும் வண்ணக்கலவை வானவில்

- செல்வா

மழைத்துளிகள்



மழையின்
முதல் மழைத்துளி
தொட வேண்டும்
என்று எண்ண
மனமோ சொன்னது

முதல் என்ன
கடை என்ன
ஒவ்வொரு துளியும் சிறப்பு
விரிந்த வானத்திலிருந்து
பொழியும் தொடர்மழையில்
நீ தொட்டதால் எல்லாம்
முதல் துளியே
அதன் மழைக்கு ...

- செல்வா

கண்ணாடி



விலங்குகள் பல
மிரண்டன
தானென்று அறியாமல்
கண்ணாடி முன்னே

மிரள மாட்டான் மனிதன்
கண்ணாடி என்றும்
அவன் நிஜ அகம் காட்டா வரை

- செல்வா

Tuesday, February 23, 2016

தொலைக்காட்சி தொடர்கள்



மனைவி
விஜய் டி.வி. பார்த்து கொண்டிருந்த
நேரம்

கவிதை வடிக்க நினைத்த போது
பல எண்ணங்கள்
“நடுவுல கொஞ்சம் டிஸ்பர்ப் பண்ணுவோம்”
என்று தடைகள் செய்ய

“கனக்சன்” இல்லாமல் வார்த்தைகள் பல வர
நடப்பது என்ன
“நடந்தது என்ன" என்று அறியாமல்
தவித்தேன்
இனி கவிதையில்
“கலக்க போவது யாரு" என்று அறியாமல்
“டைம் பாஸ்" செய்து கொண்டிருந்தேன்

“ஒரு வார்த்தை ஒரு லட்சம்" யோசனைகள்
விடு என் வார்த்தைகள் சரி செய்யவேண்டுமே …

சரி செய்ய
“டாக்டர் டாக்டர்” என்று
யாரை அழைப்பது என்று
நினைப்பு உடன்
“பாட்டி வைத்தியம்" ஞாபகம் வர

கவிதைகளில் வடிப்பது
“அது இது எது”வென்று
புரியாமல்
உணர்வுகள் ஒன்றுகொன்று
போட்டி போட்டது
“நீயா நானா”வென்று

இந்த நேரத்தில் மனைவி சன் டி.வி.க்கு மாற ….

“நிஜம்” எதென புரிய
“வாங்க பேசுலாம்” என்று
எண்ணங்களில் ஆரம்பித்தது
“அரட்டை அரங்கம்”
“அமுத மொழிகள்" கவிதையில்
வர வேண்டும் ஒரு எண்ணம்
“சொல்லுங்கண்ணே சொல்லுங்க"
மனதிடம் வார்த்தைகளைக் கேட்க
ஏன் “நகைசுவை விருந்து”
படைக்கலாமே என்று ஒரு எண்ணம்
அல்லது கவிதையில் “குட்டி சுட்டிகள்"
செய்யலாமே ஒரு எண்ணம்
இந்த “மகாபாரதம்" முடியும் முன்

மனைவி கலைஞர் டி.வி.க்கு மாற்ற …..

“நெஞ்சு பொறுக்குதில்லையே” ஒரு
வார்த்தையும் வரவில்லையே என்று
“தேனும் பாலும் ” கலந்து கவிப்பாட
நினைத்தோமே
வார்த்தைகள் “நலம் பெற" அடுத்து
“மானாட மயிலாட" உடன்
வார்த்தைகள் ஆட
“விடியலே வா" எண்ணி
பாரதியின்
“ஓடி விளையாடு பாப்பா"
பாடல் படித்தேன்


இப்போது மனைவி ஜெயா டி.வி.க்கு மாற ….

அடிக்குமா பழைய
“ஜாக்பாட்" என்று நினைக்க
“தேன் கிண்ணம்" பழைய
பாடல்களை இரசிக்க
ஆரம்பித்து விட்டேன்

கவிதை எழுதும் எண்ணம்
கொஞ்சம் தள்ளி போனது

திரும்பி நினைத்தேன்

கருத்துகள் கணத்தில் ஒளிர
வார்த்தைகள் வளைய வடிவுற
சாரத்தை சாரும் ஒலிக்க
“ஒளியும் ஒலியும்” ஆக இந்த அறு(சு)வை கவிதை

- செல்வா

நாட்டியம்


அவள் இடையோ
இல்லை என்றான்
அவள் நடையோ
நாட்டியம் என்றான்
இல்லாத நாட்டியம்
பார்க்க வீதியெங்கும் கூட்டம் !!!

- செல்வா

Sunday, February 21, 2016

காதலியும் மனைவியும்


மனைவியுடன் காதலியை ஒப்பிட
ஓராசை ஓட
கவியாய் மலர

மாயத்தில் மயங்கினேன் காதலியிடம்
மந்திரத்தில் கட்டுப்பட்டேன் மனைவியிடம்

காதலுடன் களவும் கலந்ததுள்ளதால்
மனம் காணும் சாகசம்
கனவுடன் காலம் கொள்ளும்

மனையில் பொறுப்புடன் நின்றதால்
மனதில் தட்டுப்படும் சிறு ஆயாசம்
கவலையும் கனவை முந்தும்

காதல் வருவதை நினைத்து வாழும்
கற்பனையில் வாழ்வும் வளையும்
இல்லறம் இருப்பதில் இருப்பு காணும்
நிஜத்தில் வாழ்வும் நிலைக்கும்

காதலி கற்பனையின் மஞ்சனம்
மனைவி நிஜத்தின் நிதர்சனம்

கற்பனையில் மட்டும் வாழவில்லை
கற்பனையல்லா வாழ்வும் சலித்திடும்
கனவுகள் மெய்ப்பட
காதலியை மனைவியாக்கு
வாழ்வு சிறப்புக்கொள்ள
மனைவியை காதல் கொள்

- செல்வா

இயற்கையுடன்



அறிவு அளித்த வரங்கள்
அறநிலையற்ற பேராசைகள்
குறைசெயல்கள் என்றும்
கறை செய்ய செய்ய
கறுவும் இயற்கை அன்னை
அறுப்படும் மெல்ல பந்தமும்

நாளும் வளரும் தேவைகள் ஒன்றா
இயற்கையின் இயல்பான வேகங்கள்
செயற்கைகள் இயற்கையின் மாற்றாய்

இயற்கையுடன் வாழ்வொத்த எண்ணினேன்
செயற்கையாய் வாழ்வைக் கழித்தேன்
சிறகொடிந்த பறவையாய் பறந்தேன்

- செல்வா

Friday, February 19, 2016

துளிகள் - 3 ஹைக்கூ கவிதைகள்



வலிமையே என் தன்மை
ஒளிந்து கொள்ள வழியில்லை
உடையும் சிறு மலைகள்

******

மறைவில்லாமல் சொல்
மழுப்பலுடன் உண்மைகளைச் சொல்
தகவலறியும் சட்டம்

******

அடித்து திருத்துனாய் எனை
அடியோடு மாறி நின்றேன்
சிலை வடிக்கும் உளியே

******

நாட்டின் ஒரே வீடாம்
நாளும் அங்கே கூச்சல்கள்
நல் நாடாளுமன்றம்

*******

வெற்றி தோல்வியில்லை
கோடிகள் காண பல கோடிகள்
கிரிக்கெட் விளையாட்டு

*******

உலகின் ஒரு உத்தமம்
என்னை அறியாதவரில்லை
ஸ்டிக்கர் விளம்பரங்கள்

- செல்வா

துளிகள் - 2 ஹைக்கூ கவிதைகள்




தேவைக்கென்று செய்
தேவை இல்லாத்திற்கும் செய்
மறியல் போராட்டம்

******

கொடுத்தால் நாட்டுக்கு
கொடுக்கா விட்டால் எங்களுக்கு
வரியும் அதிகாரியும்

******

மரணமே வியாபாரம்
மரணிக்கா விட்டால் நட்டம்
காப்பீடு திட்டம்

******

சொர்க்கத்தில் நானும்
எதைப் பற்றியும் கவலை கொள்ளேன்
தாய்மடியில் குழந்தை

*****

பொய்களுடன் வளர்ப்பு
வருடங்களில் நீதிமானாக
நீதிபதி பதவி

*****

பிணியெல்லாம் தீர்க்கும்
தீர்ந்தப்பின் மீண்டும் மயக்கம்
மருத்துவமும் செலவும்


- செல்வா

Thursday, February 18, 2016

துளிகள் - ஹைக்கூ கவிதைகள்


வானம் தூரத்தில்
பூமி தானும் சுற்றுகிறது
பசிதரும் மயக்கத்தில்

********

ஆட்சியே காலடியிலே
தொகுதியை சிங்கப்பூர் ஆக்குவோம்
கேட்பவன் கேனையானால்

*******

நல்லோர் காணா மழை
அல்லோருக்கு ஆயிரம் மழை
தந்திடுமே வசூல் மழை

*************

படிக்காத மேதை
படித்தும் படிக்காத மேதை
நம் அரசியல்வாதிகள்

*******

கூழை கூலிகளும்
அரசாங்கத்தின் அதிகாரிகள்
ஆம் ஆமாம் சாமிகள்

*******

கஜானா காசில்லை
நிரப்பவே தன் குடும்பம் தியாகம்
குடிபோதையின் குடிமகன்



- செல்வா

விசித்திர உலகம் - பகுதி 3


விசித்திர உலகம் - பகுதி 3


வீரம் - காளை கட்டுதல்
*******************************

காதல் செறிந்த
காதல் உலகைக்
கண்டீர்
வீரம் விளைந்த மண்ணின்
வீரம் காண வாரீர்
வீர விளையாட்டைக்
காண வாரீர்
விந்தைகள் பலவுண்டு
விரைந்து வாரீர்

கட்டுக்கடங்கா காளைகள்
காணீர்
காண கண்கள் அஞ்சும்
கேளீர்
திமிரான காளைகளின்
திமிலைப் பாரீர்
திகைத்து நிற்பீர்

காளை கட்டுதல்
விளையாட்டின் பெயராம்
ஜல்லிக்கட்டு போலே தோன்றும்
வித்தியாசங்கள்,
விவரங்கள்
அறிவீர்

வளர்த்த காளைகளல்ல இவைகள்
வளர்ந்த காளைகள் தானே
வளர்ந்த காளைகள்.
வன்மையைத் தன்மையாய்
வடித்தவை
வேகத்தில் துடியாய்
துடிப்பவை.

காளையைக் கண்டு
கலக்கம் காணாதீர்
வீரர்கள் காண இப்பக்கம்
விரைவீர்
வீரத்துடன் அவர்தம்
விகேவத்தைப் பாரீர்
கண்களின் உள்ள கருணை
காணீர்

காளையைக் கட்ட
சிங்கங்களைப் பாரீர்
ஆண் சிங்கங்கள்,
பெண் சிங்கங்கள்
எல்லா சிங்கங்களைக்
காணீர்

வீரம் ஆணென்று பெணென்று
பேரம் காணாது
வைரம் பாய்ந்த நெஞ்சும்
வைராக்கியம் போதும்
விளையாட்டின் விதிகளைக்
கேளீர்

காதல் கொள்ளார்
களத்தில் செல்லார்
காலணிகள் அனுமதியார்
காளை ஒன்று வீரர் ஒன்று

காளையின் திமிலுடன் ஓட்டம்
கருணையால் காதல் மனத்தால்
காளையிடம் வரும் மாற்றம்
காளையும் அடங்கும் அவர் வசம்

காளையின் மேல்
கருணை குறைய குறைய
காற்றில் மிதப்பர்
காளையிடம் எளிதில் தோற்பர்

வென்றோருக்கு
காளையுடன் பல பரிசு
மேலும் நல்ல உபசரிப்பு

துணிவும் கருணையும் வலிமையும்
ஒரு சேர விளையாட்டு
எங்கள் விளையாட்டு

காதல் கொண்டோர் எல்லோரும்
காளையும் கொள்வர்
காதலையும் வெல்வர்

- செல்வா

(தொடரும்.....)

விசித்திர உலகம் - பகுதி 2


விசித்திர உலகம் - பகுதி 2

காதல் ஈர்ப்பு விசை
*************************


காற்றை ஆனந்தமாக சுவாசித்து
காலாற நடக்கலாம்
வாரீர்
எங்கள் உலகில் நடக்கலாம்
வாரீர்

கண்ணை கவரும்
காலணிகளைப்
பாரீர்
அற்புத காலணிகள்
பாரீர்
அணிந்து
மெல்ல நடத்து வாரீர் !!

விசித்திர உலகின்
மிஞ்சும் கண்டுபிடிப்பு
விசேச காலணி இந்த
அற்புத காலணி

காலணி புகழ் பாடும்முன்
அறிவீர் எங்கள்
விசித்திர உலகின்
உத்தமம் ஒன்றை!
…….
…….
காதல்ஈர்ப்பு விசை

பூவுலகத்தில் ஒரு
புவிஈர்ப்பு விசை
விசித்திர உலகத்திற்கு
காதல்ஈர்ப்பு விசை

காதல்ஈர்ப்பு விசையின்
தனித்தன்மை
தனிநபருக்கு தனி அளவாம்
காதல் அளவே
காணுமதன் ஈர்ப்பின் அளவு

அதிகாதல் அதிஈர்ப்பு
காதல் அகல அகல
காற்றிலே மிதப்பீர்

கற்பனையில் மிதப்பது எளிதிங்கு
காற்றில் மிதப்பது கடினம்
சிறு காரியமும்
சிரமமே

அற்புத காலணிகள்
அவசியம் கேளீர்
அணிய அதுதரும் ஈர்ப்பு சக்தி
விசித்திர உலகில் உங்கள்
வாழ்வும் எளிதாம்

அற்புத காலணி
காதல் குறியீடு அளவை அளக்கும்
ஈர்ப்பின் அளவை வளைக்கும்

சிறுகால இடைவெளியில்
காதல் அளவு வளையும்
அதிகாதல் கொண்டவரும்
அணிய இங்கு அவசியம்

காலணிகள் இங்கு இலவசம்
அவசரம் வேண்டாம்
கேளீர்
பயன்பாட்டிற்கு தரவேண்டும்
பணம், ஈர்ப்பின்
பயன்ப்பாட்டிற்கு மட்டும்

காதல் குறைய குறைய
பயன்பாடு ஏறும்
காதல் வளர்ப்பீர்
கவலை மறைப்பீர்

சிற்றுலா பயணிகள்
பயன்பாடுகள்
என்றும் இலவசம்

- செல்வா

(தொடரும் ....)

Wednesday, February 17, 2016

விசித்திர உலகம் - பகுதி 1


காண வாரீர்! காண வாரீர்!
விசித்திர உலகம்
காண வாரீர்!
மனம்விரித்து காண வாரீர்!
விந்தைகள் பல உண்டு
சிந்தை சிறக்க
காண வாரீர்!
அகந்தையற்று
அக கண்களோடு காண வாரீர்!

சிற்றுலா வருவீர்
எங்கள் விசித்திர உலகை
சுற்றி ஆனந்தம் கொள்வீர்

நிலவுகள்
*************

வான்மதிகள் இரண்டு
வானத்தில் வந்து உலவுது
காணீர்
காலை மாலை என்று
காலம் மாறாது
களங்கமில்லாமல்
கண்ணில் தெரிது
காணீர்

அமாவாசை பௌர்ணமி
என்று பேதமில்லை
தேயும் வளரவும் என்ற
தேற்றம் இங்கில்லை

கண்ணில் அது காணவில்லை
என்றால் கவலை கொள்ளுங்கள்
காதல் உங்கள் நெஞ்லிருந்து
மறைந்தது எண்ணி
நிலவுகளை அது
மறைத்தது எண்ணி

காதல் கொள்வீர்
காதல் கொள்வீர்
கண்ணுக்கு இனிய நிலவுகள்
காண தவறீர்

வண்ணத்தில் நிலவைக் கண்டால்
குழம்பாதீர்
எங்கள் வானத்தில்
பல வண்ணத்தில்
நிலவுகளைக் காணலாம்
கண்டு களிப்பு அடைவீர்

விசித்திர உலகின்
விந்தை ஒன்றைக் கேளீர்
நிலவுகள் இரண்டு என்றாலும்
தரும் காட்சிகள் பல

காணும் உயிர் ஒவ்வொன்றும்
அதன் உரிய நிலவுகள்
தனியே காணும்
அற்புதம் இங்கு உண்டு
வண்ணங்கள் அங்கு
மாறும் அவரவர்
எண்ணங்கள் போல்

நிலவுவிடு தூது
நிதர்சனம் இங்கு
நிலவும் நிலைக்கண்ணாடியாய்
உலவும்

உன் காதல் மனத்திற்கு ஓர் நிலவு
உன் காதலர் மனத்திற்கு ஓர் நிலவு
உன் மனப்போக்கிற்கு ஏற்ப
ஒரு நிலவில் மாற்றம்
உன் காதலரின் மனப்போக்கிற்கு ஏற்ப
மற்றொரு நிலவில் மாற்றம்

உன்னை உணர்த்த உன் காதலுக்கு வாய்ப்பு
காதலரின் தன்மை அறிய உனக்கும் வாய்ப்பு

நிலவு வண்ணங்களுக்கு என்று தனி
அர்த்தங்கள் இங்கில்லை
அகராதிகள் ஏதுமில்லை

உன்னை நீ அறி
உன்காதலையும் நீ அறி
வண்ணங்கள் அர்த்தங்கள்
அதுவே தெளியும்

இங்கு சிலர்
நிலவுகளில்லாமல் வாழ்ந்தவர்கள்
நிம்மதியில்லாமல் வாழ்ந்தவர்கள்
வரலாற்றுடன் மறைந்தவர்கள்

எங்கள் நிலவுகள்
கவிதையில் வருபவையல்ல
கவிதையாய் வாழ்பவை
காதலுக்கு சாட்சியல்ல
காதலின் காட்சிகள்
எடுத்துரைக்கும் மாட்சிகள்

- செல்வா

( விசித்திர உலக உலா தொடரும்.....)
பி.கு: Fantasy உலகம் சிறிது (அல்ல பெரிய) கற்பனைகளுடன் எழுத முயற்சி. விமர்சனங்கள்/கருத்துக்கள் அன்புடன் வரவேற்க படுகிறது.

முதல் விமான பயணம்




காற்றை கிழிந்து பேரூந்து பயணம்
கல்லூரி சென்ற தருணம்
தடதட சத்தத்துடன்
இரயிலில் வெளியூர் பயணம்
நினைவுகள்
கண்மூடி திறந்த நேரத்தில்
மெல்ல வந்து போனது

ஆயிரம் எண்ணங்கள் அலைப்பாய
சில்லேன்று ஒருகாற்று வருட
உணர்ந்தேன் நான் இருப்பது இப்போது
சென்னை விமான நுழைவாயில்

வெளிநாட்டு வேலை
அதைவிட மனதில் முக்கியமாக
முதல் விமான பயணம்

வாழ்வின் பெரும் திருப்பம்
வளர்த்த பலநாள் விருப்பம்
வடிகால் கண்ட தினம்

ஆனந்தம் என்று அளவாட முடியாது
தாய், தந்தை, அக்கா, அண்ணன்,
நண்பர்கள் விட்டு
பிரிந்து செல்லும் நேரம்
இருந்தும் மகிழ்ச்சி ரேகைகள்
என் முகத்தில்

ஆயிரம் ஆலோசனைகள்
அறிந்த்ததும் சில அறியாததும்
பாஸ்போர்ட் எங்கே?
டிக்கெட் எங்கே?
லக்கேஜ் எங்கே?
அதே கேள்விகள் பலரிடம் இருந்து

விமான நிறுவன கவுண்டரில்
செய்வன செவ்வன செய்தேன்
அரசாங்க குடியேற்ற முறைகள்
முழுவதும் முடிந்தது

படியேறி வணக்கத்தைப் பெற்று
விமானத்தில் பிரவேசம்
பட்டிக்காரன் மிட்டாய் கடையைப்
பார்த்தானாம் வாசகம்
நினைவில் வர

இருக்கை அமர ஒரு பெருமூச்சு
ஆர அமர்ந்த நெஞ்சு

சீட் பேல்டின் இயக்கவியல்
இயல்பாய் அறியவிட்டாலும்
இனிதாய் முடித்தேன்

மிக கவனமாக கவனித்தேன்
பேராசிரியரின் பாடத்தைவிட
விமானப் பணியாளரின்
பாதுகாப்பு விளக்கங்கள்

ஓடுபாதையில் விமானம் வானில் ஏற
என்வாழ்வும் வளமாய் ஏறும்
எண்ணம் என்னில் எழ
கட்டங்கள் சிறுபுள்ளியாய் மாறியது

அன்புடன் அன்னை உணவு
இல்லை என்றாலும்
விமானத்தில் முதல் உணவு
இல்லை உணவு பொட்டலம்(!)

எப்போதும் கவனித்து சாப்பிடு
என்றாள் அன்னை
அர்த்தம் புரிந்தது
காலிடுக்கில் பொட்டலத்தைப்
பிரித்து சாப்பிட
நிச்சயம் தேவை
அதிக கவனம்

ரொம்ப ஆட்டம் போடாதே
சொன்ன நண்பர்கள்
ஞாபகம் இப்போது
ஆட்டம் காணும் விமானத்தில்
ஆட்டம் காணாமல்
எப்படி கழிவறை செல்ல?

ஒவ்வொரு நிமிடமும்
பயணத்தின் பரவசம்
அசர சிறு கண் உறக்கம்

எழுகையில் விமான இறக்கம்
என் முதல் விமான பயணம்
இனிதாய் முடிந்தது

எத்தனை விமான பயணங்கள்
என்றாலும் முதல் பயணம்
என் நெஞ்சில் மறையா புதினம்

- செல்வா

Tuesday, February 16, 2016

காதல் வழி


காதல் வழியில் என்றும் பயமடி
மடியில் கணம் உந்தன் மனமடி
கவரி மானும் நானும் ஓரினமடி
நீயே எந்தன் அடியும் முடியுமடி

நிதமுன் செய்கை எனக்கு அத்துப்படி
நாலா புறமும் வெடிக்கும் சரவெடி
நாளுமுன் நினைவு எந்தன் முகமூடி
நாளும் என்னை ஆட்டும் மகுடி

நன்று படுத்தும் உன்காதல் நையாண்டி
மனமும் தினம் ஏந்தும் தீச்சட்டி
இருந்ததும் நாடும் உன்காதல் திருவடி
வேளைக்கு வேளை எடுப்பேன் காவடி

- செல்வா

இரவின்மடி


இரவின்மடி
உந்தன் நினைவுமடி
பொருந்தா அடி
கவிதைப் போல் உறுத்துதடி
அது நீயென்னை காணா கணமடி

***

உறக்கம் தாரா மயக்கமாய்
கொய்தும் கொய்யாப்பழமாய்
நீ உரைத்த காதலாய்
கண்ணில் சுழல்வாய்

***

இரவில் அறிந்தேன் ஏகாந்தம்
காதல் கொண்ட மகரந்தம்
உயிரில் உணர்ந்தேன்
உன் மின்காந்தம்

***

இல்லை என்று நீ சொன்னதில்லை
இரவில் என் நினைவில் என்றுமில்லை
அது என்னாதிக்க எல்லை .

- செல்வா

காதல் மருந்து


ஹைக்கூ/லிமரைக்கூ:

பசலை கண்டது
உண்பதிற்கு இங்கில்லை
காதல் மருந்தது

லிமரிக்:

காதல் காதல் அதுசெய்
நோதல் நோதலது பசலைநோய்
வைத்திய வகையறியா
வருத்தம் வேண்டாம்
காண்பாய் காதலே மருந்தாய்


வெண்பா:

காதலென்று காதலென்று காதலால் நோய்வசம்
காதலுடன் காதலால் காதலிடம் ஏங்க
பசலைபிணி காணதுவும் காணாசெய் - என்றும்
காதலே உன்மருந்து உண்

- செல்வா
பி.கு: மூன்று வகையில் எழுத ஆசை.

பல விகற்ப இன்னிசை வெண்பா :
சீர்கள் வாய்ப்பாடு - அசை தளை
கா/தலென்/று/ - கா/தலென்/று/ கூவிளங்காய் - நேர் வெண்சீர் வெண்டளை
கா/தலென்/று/ - கா/தலால்/ கூவிளங்காய் - நேர் வெண்சீர் வெண்டளை
கா/தலால்/ - நோய்/வசம்/ கூவிளம் - நேர் இயற்சீர் வெண்டளை
நோய்/வசம்/ - கா/தலு/டன்/ கூவிளம் - நேர் இயற்சீர் வெண்டளை
கா/தலு/டன்/ - கா/தலால்/ கூவிளங்காய் - நேர் வெண்சீர் வெண்டளை
கா/தலால்/ - கா/தலி/டம்/ கூவிளம் - நேர் இயற்சீர் வெண்டளை
கா/தலி/டம்/ - ஏங்/க/ கூவிளங்காய் - நேர் வெண்சீர் வெண்டளை
ஏங்/க/ - பச/லைபி/ணி/ தேமா - நிரை இயற்சீர் வெண்டளை
பச/லைபி/ணி/ - கா/ணது/வும்/ கருவிளங்காய் - நேர் வெண்சீர் வெண்டளை
கா/ணது/வும்/ - கா/ணா/செய்/ கூவிளங்காய் - நேர் வெண்சீர் வெண்டளை
கா/ணா/செய்/ - என்/பது/ தேமாங்காய் - நேர் வெண்சீர் வெண்டளை
என்/பது/ - கா/தலே/ கூவிளம் - நேர் இயற்சீர் வெண்டளை
கா/தலே/ - உன்/மருந்/து/ கூவிளம் - நேர் இயற்சீர் வெண்டளை
உன்/மருந்/து/ - உண்/ கூவிளங்காய் - நேர் வெண்சீர் வெண்டளை

சித்தாந்த லிமரைக்கூ


மனமோ உள்ளபடி
மறைப்பொருள்
அம்மாவின் அடுப்படி

*****

வெட்டவெளி பரம்பொருள்
தேட காணவேண்டும்
உன்னுள் உறை உருப்பொருள்

*****

தொடர்களின் நிகழ்வு
தொடர்புகள் புலப்படா
பட்டாம்பூச்சி விளைவு

*****
உபஅணுக்களின் நாட்டியம்
குவாண்டம் கோட்பாட்டில் உண்டு
சிவ அண்ட நடனம் (Siva’s Cosmic Dance)

******

கணபொழுது எண்ணம்
நிகழ்வில் வாழும் முறை
புத்தனின் போதிமரம்

செல்வா

------
பி.கு: கருணா ஐயா அவர்கள் கருத்து உரையாட்டில் விளைத்தது. அவர் வார்த்தை விளையாட்டில் விளைந்த சில இங்கே:

மனமோ உள்ளபடி
பரம்பொருள்
திருவடி தேடியபடி!

மறைபொருள் தேட
உள்நோக்கிப் பயணம்..
அவனையே பாட!

Sunday, February 14, 2016

வியாபார ஹைக்கூ


அறிவில் அழகு பூக்காடு
விலைபோகா சந்தைகள்
உப்பில் கருவாடு

*******

ஏற்ற இறக்க வியாபாரங்கள்
தர்க்கங்கள் லாபமில்லை
பங்குசந்தை நியாயங்கள்

*****

ஏழை தற்கொலை கட்டாத வட்டி
கவலையில் பணக்கார கடனாளிகள்
வங்கியில் கடன் தள்ளுபடி

******

படிப்பறிவு அகல்விளக்கு
வேலையின் அவசியம்
அடிப்படை செல்வாக்கு

******

விளைச்சல் குறைச்சது கொஞ்சம்
பருப்பு விலை வானளவு உயர்வு
ஆன்லைன் வர்த்தகம்


- செல்வா

நிழலின் வெளிச்சம்


நிழலும் உன்னுடன் வரும்
வெளிச்சம் உன்மேல்
விழும்வரையில்

நிழல் உன்னுடையுது என்றாலும்
நிழலின் நிளமும் அகலமும்
வெளிச்சம் விழும் விதத்தில்

நிழலும் உன்செயலை ஒற்றும்
ஆயினும் வெளிச்சம் விழும்
கோணம்தான் நிர்ணயிக்கும்

நிழல் என்றும்
வெளிச்சம் புகா பொருளுக்கே
ஒளிவற்ற எண்ணங்கள் கொள்ளுங்கள்
நிழலற்ற நிஜத்தில் வாழ்வோம்

- செல்வா

காதல் நிறம்



காதலின் நிறமாம் சிவப்பு
இரத்தத்தில் உறைந்தால்
மென்மையான நினைவிதழ்களாய்
ரோஜாவை ஏற்றுக்கொள்
ஆயிரம் எண்ணத்தில் அற்புதமாய் மலர்ந்த
செந்தாமரையை ஏற்றுக்கொள்

காதலின் நிறம் வெள்ளையாம்
வெள்ளை மனதினர் எளிதில் வசம்பட
மனம் வீசும் வாழ்வை எண்ணி
மல்லிகையை ஏற்றுக்கொள்
இரவில் சுவை கூட்டும் காதலுக்காக
அல்லியை ஏற்றுக்கொள்

காதல் நிறம் நீலமாம்
வானம் போல் மனம் விரிந்ததால்
நோக்கும் பார்வையிலே குழைந்தால்
அனிச்சம்தனை ஏற்றுக்கொள்

காதல் நிறமாம் மஞ்சள்
மங்கள திரு உருவுடன் நீ
காதல் சூட்டைத் தணிக்க
ஆவாரம்பூதனை ஏற்றுக்கொள்

எத்தனை பூக்கள் எத்தனை பூக்கள்
அத்தனை வண்ணம் அத்தனை வண்ணம்
ஆயிரம் மலரும் காதல் மனதில்
அத்தனை செய்யும்
காதலுக்கு அர்ச்சனை

- செல்வா

நடப்பு - லிமரைக்கூ


ஓட்டை இடுவோம் விற்பனை
பட்டும் அறியோம் படிப்பினை
தலையில் தானே மண்ணிடும் யானை

******

வாழ்வில் என்றும் வஞ்சனை
வருத்தம் கொள்ளும்போது மட்டும்
கடவுளிடம் செய்யும் பிராத்தனை

*******
வாய்ப்புகள் தரும் திருப்புமுனை
தூங்கி வடிந்தனபல தினம்
வாழ்வு இன்றும் தெருமுனை

******

வெளியே அதட்டியடித்து உருட்டல்
நாளை என்பதே பயம்
தலைவனுக்கு அடிவருடல்

******

மேடையிலே ஆயிரம் அறைகூவல்
ஆராவரத்துடன் கைதட்டல்
முடித்ததும் பணத்திற்கு அணிவகுத்தல்

*******

தேர்தல் நேரம் கட்டும் இறக்கை
நல்ல விடியல் வேண்டி
கட்சிகள் விடும் அறிக்கை

*****

களவாட ஒரு ஏற்பாடு
கலவரம் ஆங்கங்கே
சாதிக்கு வேண்டும் ஒதுக்கீடு

****

மானுடத்துடன் மனதைக் கட்டு
மாட்டு இறைச்சி ஏற்றுமதி
தடை செய் ஜல்லிக்கட்டு


- செல்வா

Friday, February 12, 2016

பொருள்கள் ஹைக்கூ


ஆயிரம் கொன்றார்கள்
ஆயிரம் தந்தார்கள்
பட்டுப்புடவை

*****

நடிகையின் பெயர்கள்
எங்களுக்கு அங்கீகாரம்
புடவைகள்

******

உருகுவேன் என்று அறிந்தும்
எரித்தார்கள், ஒளிர்ந்தேன்
மெழுகுவர்த்தி

*******

ராஜாக்கள் ராணிகள் கனவான்கள்
சில மணித்துளிகள் மட்டும்
வாடகை துணிகள்

*****

எங்களை விட்டு சென்றால்தான்
கடவுளைக் காண முடியும்
காலணிகள்

******

மரங்கள் கொன்ற நாங்கள்
கறைகள் படபட மதிப்புக் கூடுதே
காகிதம்

*****

மதிப்பில்லை இங்கே
சுத்தம் என் தொழில்
துடைப்பம்

******

மூன்றாவது விசிலுக்கு ஒடி வர
எங்கள் ஒப்பந்தம்
குக்கர்

******

ஊருக்கு தெரியாதவர்கள்
அவசியம் அதிகமுடைவர்கள்
உள்ளாடைகள்

*****

வலைக்கு உள்ளே வா
உனக்கு பாதுகாப்பு தருகிறேன்
கொசுவலை


- செல்வா

காதலர் தினம்


நேரமில்லாதவர்கள்
நேரம் கொள்ள அனுசரிக்க ஒரு நாள்
நேரமின்றி எல்லா
நேரமும் காதல் கொள்ளும் நமக்கும்
வேண்டுமா ஒரு தினம்

 நேரம் எவ்வளவு  இட்டாலும்
நேர்த்தியாக கொண்டாட
நேசம் நல்கொண்டு
நெகிழ்ச்சியுடன் நெஞ்சிலுள்ள
நேர்மையான காதலுடன்
நேராக சென்று வாழ்த்த
வேண்டும் காதலர் தினம்

-  செல்வா 

அரசியல் ஹைக்கூ


பணம் பாதாளம்வரை பாயும்
அதையும் தாட்டி பாயும்
அரசியல்

*******

நெல்லுக்கும் இறைக்கும் தண்ணீர்
புல்லுக்கு அதிகம் பொசியுமாம்
அரசாங்க இலவச திட்டங்கள்

*****

நாளொன்று ஒரு பேச்சு
என்றாலும் நாளும் தருவோம்
வாக்குறிதிகள்

*****

நாங்கள் இதில் நல்லவீரர்கள்
நாயும் மதிக்காது இதன்று
வாய்சொல்

*****

கையில் கொஞ்சம் பணம்
வழியில் துப்பாக்கியுடன் பிச்சைக்காரன்
அதிகாரிக்கு கையூட்டு

*******

இன்றைய உடன் தேவை
நல்ல மூளைச்சலவை
வாக்குரிமை

****

எதுவும் நிரந்தரமில்லை
எதுவும் சாத்தியம்
தேர்தல் பேரம்

- செல்வா

சமையல்கூடம் ஹைக்கூ



ஆவி பறக்கிறது அங்கிங்கும்
மணத்தில் வேறு மல்லிகைகள்
தட்டில் சூடான இட்லிகள்

****
ஆடை திருட்டுப் போனது
இருந்தும் சிரித்தாள் அம்மா
பாத்திரத்தில் இல்லை பாலாடை

****

சுட்டாலும் சுடும்போதே
முடிக்காமல் விடமாட்டார்கள்
கோப்பையில் தேநீர்
****

ஆங்காங்கே வெடி சத்தம்
அமைதியாய் அதை ஆளுமை
கடுகு தாளிப்பு

*****

வானத்து வட்ட நிலாக்கள்
பொத்தல்கள உடன்
தட்டில் தோசைகள்

******

தத்தி தாவாது
வாயில் தாளம் போடுது
ஸ்ப்ரிங் ரோல்

******

பேப்பர் வாசித்து பழக்கமில்லை
தின்றுதான் பழக்கம்
பேப்பர் ரோஸ்ட்

******

குப்பையில் போகாமல்
தொப்பையில் காரணம்
உப்பு

*****
காரங்கள் பல சொன்னாலும்
இனிப்பே எனக்கு என்றும்
பலகாரம்

****

குரங்கும் மனிதனும் ஒன்று
வேண்டாம் என்று சொல்லாது
வாழைப்பழம்


- செல்வா

Thursday, February 11, 2016

வாழ்க்கை ஹைக்கூ - 2


வீடு வீடாய் சென்றாலும்
பழகுவார்கள் உபசரிக்க மாட்டார்கள்
தபால்காரர்

****
என்னை வெட்டி விட்டாலும்
விரைவில் உன்னுடன் வளருவேன்
முடியும் நகமும்

****

கோழி என்றாலும் குருமாக்கு உதவேன்
சத்தமிட்டும், பிடிக்க இயலாது
இராக்கோழி

*******

எல்லோர் வீட்டில் இருப்பேன்
என்பெயரால் சிலபேருக்கு நல்லஊதியம்
வாஸ்து

********

பெண் சுகந்திரத்திற்கு பாடுபடும்
அன்பர் வீட்டில் வளர்கிறது
கூண்டுக்கிளி

*******

எழுத மறந்தோம்
எழுதாமல் மட்டும் இருந்ததில்லை
மடிகணினியால்

******

நன்கு வளர்த்ததை வெட்டு
ஆனந்தம் உண்டு
அறுவடை நாள்

******

மாமியாரை மாமியாருடன்
திட்ட முடியும்
தொலைக்காட்சி மெகா தொடர்

*****

யாருக்கும் தெரியாமல் காரியம்
கையில் கறை
கருப்பு டையடிக்கும் மாமா

******

நமக்கு தெரியாமல்
ஊசி போடும் மருத்துவர்
கொசு


- செல்வா

Wednesday, February 10, 2016

வாழ்க்கை ஹைக்கூ


வீரமும் கோபமும் அறிவும்
என்றும் உள்ளது எங்கள் ஊரில்
வெட்டிப் பேச்சுகளில்

மாதம் தவறாமல்
ஏழை வீட்டில் கதவை தட்டுகிறான்
கந்து வட்டிக்காரன்

முள்ளில் சிக்காமல்
முள்ளோடு காலம் கடத்தும்
கைக்கடிகாரம்

படியாதையும் படிய வைப்பான்
படிக்காவிட்டாலும் நன்றாக திருத்துவான்
முடித்திருத்தகத்தில்

வெள்ளி வேண்டாம்
கொஞ்ச நாள்கள் மிரட்சி
முதல் நரைமுடி

- செல்வா

கவி விதை


கவி விதை இட்டது தாய்தமிழ்
துளிர் விட்டது தண்ணீர் விட்டது
அவள் மேல் கொண்ட காதலால்
உரம் இட்டது சிறுசெடியாய் வளர்த்தது
நண்பர்கள் அளித்த உற்சாகத்தால்
மரமாய் மாறும் கனிகள்பல தரும்
நயம் நல்கும் பயிற்சிகளால்

- செல்வா

மனோரதம்


இதயமென்றும் இன்புற இடறும் இடையும்
நாடகமாய் நளினமாய் நடக்கும் நடையும்
உள்ளத்தை உலுக்கும் உடுத்தும் உடையும்
கவரும் கட்டழகியின் கவிதைப்பாடும் கண்களும்
மதிதனை மயக்கும் மல்லிகையின் மணமாய்
வானில் வட்டமிடும் வருடும் வண்ணத்துப்பூச்சியாய்
மனதில் மலர்மாலையுடன் மதுரமாய் மனோரதம்

ஓகோவென்று உவமைகளுடன் ஒன்றும் உண்மைகள்
ஓராயிரம் உறுத்தல்கள் ஒறுத்தா உரசல்கள்
ஒப்பும் உணர்வுகளுடன் ஒளியும் உள்ளங்கள்
ஒல்லும் உபயங்கள் உதவும் ஊக்கங்கள்
உயிரில் ஊறுநீராய் உன்னைப்பற்றி உவப்பு

- செல்வா

கடற்கரை


மெல்ல மனதை வருட
பட்டும் படாமல் ஏக்கத்தில் என்னை விட்டு
செல்லும் அலைகள்

தத்தளிக்கும் கடலலைகள் வேண்டாமென
ஒதுங்கிய பாய்மரத்தின் நிழலில்
ஒதுங்கும் காதலர்கள்

கவலைகள் சிறிதுமின்றி மீண்டும்
கட்டினான் அந்த சிறுவன்
அலையழித்த மண்கோட்டையை.

என்னை மிகவும் உள்ளே இழுத்தது
எல்லா அலைகளை விட வேகமாய்
அலைகளுடன் விளையாட்டு

கடல் அலைகள் கரை தொடுமுன்
ஒடி மறைந்துக் கொண்டது
வளையில் நண்டு

காதல் மயக்கத்தில்
சுண்டல் வாங்குகிறோம் பசிமயக்கத்துடன்
உள்ள ஏழை சிறுவனிடம்

- செல்வா

பி.கு: ஹைக்கூ கவிதை எழதும் முயற்சி

Friday, February 5, 2016

அன்பு மகள்


சுருக்குன்னு கோபம் வருது
நறுக்குன்னு நாக்கைக் கடிக்குது
செல்ல சேஷ்டைகள் கண்டு

வெட்டென கோபம் மறையுது
சட்டென மனசு குளிருது
சின்ன புன்னகையைக் கண்டு

மெல்லதான் வந்து நிக்குது
சொல்ல முடியாம தவிக்குது
என்திடீர் கோபத்தைக் கண்டு

வந்துதான் என்னை அணைக்குது
ஆசைவார்த்தைகள் எல்லாம் பேசுது
தன்னைப்பார்த்து சிரித்ததைக் கண்டு

- செல்வா

Thursday, February 4, 2016

ஞாயிறு


ஞாயிறு என்றதும்
ஞாபகம் ஒன்று வந்தது
ஞாளியாய் உழைத்த அலுப்பை மறக்க
ஞான்றும் மறவாது போல்
ஞாலம் சுற்றும் நாளல்லவா
ஞாதிகள் பலரைக் காணலாம் அல்லது

ஞாட்புகள் ஏதுமில்லாமல்
ஞானியாய் எதையும் காணாமல் கண் உறங்கலாம்


- செல்வா

பி.கு: ஞா வார்த்தைகள் வைத்து சிறுகவிதை சிறு முயற்சி.
ஞான்று - நாள், நேரம் , ஞாலம் - உலகம், ஞாதி - உறவினர், ஞாட்பு - போர், ஞாளி - நாய்

ஒழுங்கின்மைக் கோட்பாடு (Chaos Theory)


தெளிந்த நீருடை குளம்
ஓர் கல் எறிய
வட்ட சிற்றலைகள் வளையும்
நுண்ணலைகள் அங்கங்கே வடியும்
கூர்ந்து காண
கல்லின் எடையும்
எறியும் வேகமும்
சிற்றலைகளும்
தன்மைகள் நன்கு புரியும்

தெளிந்த நீருடை குளம்
பல கற்கள் தொடந்து
கால வித்தியாசத்தில்
வேக வித்தியாசத்தில்
எறிய
வட்ட சிற்றலைகள் பலவும் தோன்றும்
ஒன்றையொன்று தீட்டும்
நுண்ணலைகள் எங்கும் இருக்கும்
ஒழுங்கற்ற நிலை உண்டாகும்
தன்மைகள்
ஒரு தோற்றத்தில் உடையாது
ஒரு தேற்றத்தில் அடையாது

வாழ்வும் மனமும் என்றும்
ஒழுங்கற்ற முறையில் ஒடுங்கும்
வாழ்வில் ஒழுங்குமுறைகள்
வளர வளர
ஒழுங்கற்ற முறைகள் சிறு ஒடுங்கும்
நம் வாழ்விலும் பிறர் வாழ்விலும்
குழப்பங்கள் பல மறையும்

- செல்வா

Wednesday, February 3, 2016

நண்பன்


ஆசைகளை அசை இட்டோம்
வசையில்லா விசை விரும்பிட்டோம்
பாசையற்ற பசை காண்டோம்

இசைகள் என்று ஓசைகள் செய்தோம்
வசைகள் பலவுடன் இம்சைகள் தந்தோம்
திசைகள் அறியாமல் அசைவுகள் கொண்டோம்

கணக்கில்லா கணக்குகள்
வரலாறற்ற வரலாறுகள்
நம்மில் எத்தனை எத்தனை

என்றும் நூலறுந்தப் பட்டமடா
நீயில்லாமல் நானிடும் திட்டமடா
நம்நட்பும் என்றும் நுட்பமடா

- செல்வா

ஆனந்தம்


புன்னகை தவழும்
புது தென்றல்
புகும் வாழ்வில்
பூக்கள் தூவும்

கனிவு பொங்கும்
கரு விழிகள்
கமழும் காதலில்
கார்மேகமாய் பொழியும்

சிரிப்பு தவழும்
சிறு உதடுகள்
சிந்தும் வார்த்தையில்
சீர்மை தரும்

அவற்றை யெல்லாம்
அங்கமாய் கொண்டநீ
அன்பை இணைத்து
ஆனந்தம் தருவாய்
ஆருயிர் பெண்ணே.


- செல்வா

Monday, February 1, 2016

காதல் ஒரு முரண்பாடு


கண்ணாலே கவிதை சொன்னவள்
கண்கட்டி காட்டில் விட்டவள்

மயிலிறகிலே மனதை வருடியவள்
சம்மட்டியில் மனதை அடித்தவள்

கனவில் மிதக்க விட்டவள்
கனவோடு தகவிக்க விட்டவள்

சொல்லலே சுவை தந்தவள்
ஒருசொல்லில் கதை முடித்தவள்

நடையிலே கிறக்க வைத்தவள்
நடைபிணமாய் அலைய விட்டவள்

காதலைக் கொள்ளும் மனமது
காதலது கொல்லும் மனதை

காதல் என்றுமே முரண்பாடு
காதல் என்றுமே நீபாடு

- செல்வா

கண்களுடன் கவிகள்


பார்வைக் கொள்ளாமல் இருக்கும் சிறுக்கி
தேர்வு செய்தேனுன்னை மனம் இணங்கி
வார்த்தையொன்று சொல்லடி கட்டழகி
நேர்த்திக் காண்போம் தினமும் பழகி

சேரும் மனங்கள் மாறும் குணங்கள்
வேரும் ஊறும் காதல்தரும் பழங்கள்
அருமை அனைத்தும் என்னவள்
அரும்பும் மலர்கள் நல்ல மலர்ச்சிகள்

ஆசைமொழிகள் பலவும் பேசி மகிழ்வோம்
நேசமுடன் நெஞ்சினிலே கனவுகள் வளர்ப்போம்
வாசம்வீசும் வாழ்வை எண்ணுவோம்
ஓசையின்றி கண்களுடன் கவிகள் பேசுவோம்

- செல்வா